Thursday 15 December 2011

நான்.....நீ.....நாம்....1


”என்னங்க”
”என்னடா”
”அண்ணன் போன் பண்ணுனாரு”
”அப்படியா? என்னவாம்”
”எல்லாம் நல்ல செய்திதான்.,குழந்தை பிறந்திருக்காம்.நாளைக்கு ஒரு எட்டு போயிட்டு பார்த்துட்டு வந்திடாலாம் நாம.”
”ஹே!!! என்ன விளையாடுறியா? இயர் எண்டு ஒரு நாள் கூட லீவ எடுக்க முடியாது.தெரியும்ல உனக்கு”
”தெரியும்ங்க, இருந்தாலும் உங்கள விட்டுட்டு நான் மட்டும் எப்படி தனியாக” சிறு சினுங்களோடே இழுத்தாள்.

ஆறுமாசத்துக்கு அப்புறம் திரும்பவும் பேச்சிலர் வாழ்க்கையா.உள்ளுக்குள்ளே குதூகலிப்பா இருந்தது.

”என்னால் மட்டும் இருக்க முடியுமா என்ன. நீ போகனும்ங்கற என்னால வர முடியாதுடா. சாரிடா,
ஆனா நல்ல விஷயத்து போய்த்தான் ஆகனும். நீ மட்டும் போயிட்டு வந்துவிடேன் பிளீஸ் பிளீஸ்”
”அப்பா கேப்பாரு மாப்பிள்ளை வரலையான்னு.”
”நான் மாமாகிட்ட போன்ல பேசிக்கிறேன்”.

”சரி நீ ஈவ்னிங் ரெடியா இரு.நான் வந்து அழச்சிட்டு போய் பஸ் ஏத்திவிடுறேன்”.
அரை மனதோடே சொன்னாள், ”சரிங்க”
”சரிடி நான் ஆஃபிஸ் கிளம்பறேன்”.
”பை”
”என்னங்க ??? 
”என்ன?”
 ------
 ------
 ------
 ”ஹோ சாரி மறந்துட்டேன்”.
”பை பை”
-----------------------------------------
அலுவலத்தில் நுழைந்ததும் முதலில் டிக்கட் பதிவு செய்தேன். என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு மனசு கொஞ்சம் குதூகலிப்பா இருக்கே.
அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே கிளம்பினேன்.செக்யூரிட்டி ஆனந்தன் கேட்டார் “ என்ன சார் வீட்டுக்காரம்மா ஊர்ல இல்லையா”
”ஆஆஆ ஆமாம் ....ஏன் கேக்குற”
”இல்லை சார் இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருக்கீங்களே”
”இல்லை இல்லை அப்படி ஏதும் இல்லை”
-----------------------------------------.
”என்ன சார் சீக்கிரம் வந்துட்டீங்க, என்ன ஊருக்கு கிளப்பிவிடுறதுல மும்முரமா இருக்கறமாதிரி தெரியுது”?
உருக்கமாக கைவிரல்களை பிடித்துக்கொண்டு சொன்னேன்.
”என்னடா இப்படி சொல்லிட்ட, நானே நீ இல்லாம் எப்படி இருக்கறதுன்னு தவிச்சுப்போய் இருக்கேன்.” 
யப்பா, ஆர்வத்தை காட்டிக்கக்கூடாது.கொஞ்சம் விட்டாலும் கண்டுபிடிச்சிடுறாளே.

”அப்ப நீங்களும் வாங்களேன் சேர்ந்தே போகலாம்.”

”அது முடியாதுடா செல்லம்.இன்னைக்கு கூட மேனேஜர்கிட்ட சொல்லிட்டு என் டாஸ்க்க இன்னொருத்தன பார்க்க சொல்லிட்டு வந்தேன்.”
------------------------------------------------
பேருந்து ஏற்றிவிடும்போதும் கேட்டாள். ”என்னங்க இப்பக்கூட நீங்க என் கூடவே வந்துடலாமில்ல.சிக் லீவு சொல்லிக்க கூடாதா.?”
”முடியாதும்மா. ஒரு நாள்தானடா. பார்த்து போயிட்டு வா”
”சரிங்க வெளில சுத்தாம வீட்டுக்கு பொயிட்டு சாப்ட்டுட்டு சீக்கிரமா துங்கனும் சமத்துப்பிள்ளையா என்ன?.
நாளை மறுநாளே வந்துடுவேன்.”
”சரிம்மா. நீ பார்த்து போயிட்டு வா எல்லாரையும் கேட்டதா சொல்லு.”
பேருந்து புறப்பட்டு சென்று மறைந்தது.
--------------------------------------------------
ஹப்பா நம்ம ராஜ்யம் தொடங்கியது.

நேராக டாஸ்மாக் போனேன் .
”என்ன சார் சென்னைலதான் இருக்கீங்களா நீங்க ட்ரான்ஸ்ஃபர் ஆயிட்டீங்கன்னு நினச்சேன்.என்ன சார் கேஸ் கேஸா வாங்குவீங்க இப்ப ரெண்டு பீர் மட்டும்.”
புன்முறுவலோடே பீர் பாட்டில்களை வாங்கிக்கொண்டு நடந்தேன்.
வெகு நாளைக்கு பிறகு இரண்டுமணி வரை மடிக்கணினியுடன் அமர்ந்திருக்கிறேன்.
”வீட்டுக்கு வந்ததற்க்கு பிறகும் கம்யூட்டர் கூடவே உக்காந்துருந்தா என்ன ஆகறது.முதல்ல அத மூடி வச்சிட்டு வந்து படுங்க” எனும் அதட்டல் இல்லை
இரவு உண்ணாமலே உறங்கினேன்.”இன்னொரு சப்பாத்தி வச்சிக்கோங்க,பாலை குடிங்க” எனும் கட்டளைகள் இல்லை.
காலை பொறுமையாக எழுகிறேன்.
”என்னங்க எழுந்திரிங்க மணி ஆறு ஆயிட்டு இன்னும ஜாக்கிங் போகலையா”, எனும் அதட்டல் இல்லை
வெகு நாளைக்கு பிறகு எனக்கு பிடித்த பாடலை மிக சத்தமாக வைத்துக்கேட்டுக்கொண்டே குளிக்கிறேன்..
”அக்கம் பக்கத்துல மனுஷங்க இருக்காங்கல்ல குழைந்தைங்களும் இருக்கு தொந்தரவா இருக்கும்ல”, எனும் விளக்கம் இல்லை
படுக்கையை எடுத்து மடித்துவைக்கவில்லை.
லேட்டாக அலுவலகம் கிளம்பினேன். கிளம்பும்போதும் திருநீறு வைத்துக்கொண்டுதான் போகவேண்டும் என அடம்பிடித்து வைத்துவிட அருணா இல்லை..
----------------------------------------------
நண்பன் கால் செய்தான்...
”மாப்ளை என்னடா இன்னிக்கு என்ன பிளான்?”
”ஈவ்னிங் என்ன ஆஃபிஸ்ல வந்து பிக்கப் பண்ணிடு பிறகு பார்த்துக்கலாம்.”
”என் ஆஃபிஸ் நம்பருக்கு கூப்பிடு மொபைலுக்கு வேணாம்.”
”சரிடா”,என்றான்.
”எங்கடா போலாம்?”
”படத்துக்கு ?”
”படத்துக்கா எங்க என்ன படம்?”
”7 ஆம் அறிவு,உதயம்?”
”சரி”
அருணா ஊருக்கு போய் சேர்ந்துவிட்டாளா என விசாரித்து விட்டு செல்போனை வீட்டிலே வைத்துவிட்டு கிளம்பினேன்.இல்லையென்றால் குறைந்தது நூறு எஸ் எம் எஸாவது அனுப்புவாள்.இடையிலே சாப்டீங்களா தண்ணிக்குகிச்சீங்களான்னு கேக்க கால் வேற.
-----------------------------------------------
கல்யாணத்துக்குப்பிறகு முதல முறையாக அருணாவை விட்டு தனியாக படம்.
தெரிந்ததென்றால் அவ்வளவுதான்
சண்டை பிடிக்க மாட்டால்.
கத்தியின்றி ரத்தமின்றி அவள் நடத்து மவுனமொழி யுத்தம் போதும். அதிகபட்சம் அரைநாள்தான்.வீழ்த்திவிடுவாள் என்னை.
எப்போதும் நான் தான் வெள்ளைக்கொடி வீசுவேன். இருந்தும் அதை சுட்டிக்காட்டி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் சங்கடப்படுத்தியதேயில்லை.
முதல்ல முரண்டுபிடிச்சேன் இப்போதெல்லாம் பழகிடுச்சி.
--------------------------------------------------
நேராக வடபழனியில் இருக்கும் பாருக்கு சென்றோம் .”மச்சான் உனக்கு பகார்டிதானடா”, கேட்டான்
”அட!! ஆமாம்ல?,சொல்லுடா ”
ஆரம்பித்தோம்......
எக்ஸ்க்யூஸ்மீ ஒன் மோர் லார்ஜில் ஆரம்பித்து
 எச்சிக்குச்ச்மீ ஒன் மோர் லார்ஜுக்கு போய் 
எக்க்‌ஷுஷ்ஷ்மே ஒன் மோர் லார்ஜ் ல முடித்தோம்.
வீடு வந்து சேர 12 க்கு மேலானது. என்னடா கல்யாணத்துக்கு பின்னாடி கோழி மாதிரி 6 மணிக்கே கூட்டுக்கு போயிடுறன்னு எப்படில்லாம் இந்த ஆறு மாசமா கிண்டலடித்தானுங்க பயபுள்ளைங்க.
வீட்டில் இறக்கிவிட்டான். 
வீட்டை அடைய படியேறும்போது நினைத்தேன்.. ”திஸ் வாஸ் மை டே யெஸ் மை டே”. இந்த கல்யாணம்தான் என்னோட சுதந்திரத்தை பறித்துக்கொண்டது.
--------------------------------------------------
ஆடை கூட மாற்றாமல் படுக்கையில் சாய்ந்துவிட்டேன். மனசுக்குள் அருணா சென்றதில் இருந்து இந்த கணம் வரை ஓடிக்கொண்டிருந்தது.எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது இந்த பேச்சிலர் வாழ்க்கை.
அப்படியா சந்தோஷமாக இருக்கிறேனா ?
”அப்படி இல்லையே” மனசு சொன்னது.
”இல்லை இது ஒரு வீம்பு. நீ செய்யகூடாது என்பதை செய்துவிட்டேன் நீ செய்ய சொல்வதை செய்யாமல் விட்டேன் எனும் அல்ப சந்தோஷம்”.
”அப்படியா?”
”ஆம்”
மாலை அயர்வாக வீடும் திரும்பும்போது கதவைத்திறந்ததும் தரும் மெல்லிய அனைப்பிலே அத்தனை அசதியும் பறந்திடுமே.
எத்தனை கோபமாக வீட்டிலிருந்து கிளம்பினாலும் அலுவலகம் சென்றதும். ஹாய் ஹனி என வரும் எஸ் எம் எஸ் அத்தனை உற்சாகத்தை கொடுத்திடுமே.
எரிச்சலாய்,குறுக்கீடாய் தோன்றியவை அனைத்தும் சில கணங்களில் அழகானவையாக தோன்றுகிறதே இதன் மர்மம்தான் என்ன.?
வெறுமனே சுழலும் சக்கரத்துக்கும் அச்சில் சுழலும் சக்கரத்திற்க்கும் வித்தியாசம் உண்டல்லவா.அச்சில் சுழலும் போதுதான் அது அர்த்தமுள்ளதாகிறது.
அருணாவும் அப்படித்தானோ.?? என்னை ஆட்கொண்டு ஆட்டுவித்தாலும் அது அழகாகவே இருக்கிறதே.
மனசு முழுக்கா அருணா அருணா என்றது.
எதோ சுளீர் என்று உரைத்தது.செல்போனை எடுத்து பார்த்தேன்.
84 மிஸ்ஸ்ட் கால்.இன்பாக்ஸ் ஃபுல்ல்.
செத்தடா மவனே.
---------------------------------------------------
ஹெலோ பாஸ் கதை கேட்டது போதும் கிளம்புங்க
நான் என் வீட்டுக்காரம்மாவுக்க கால் பண்ணனும்.கண்டபடி திட்டுவா நீங்க கேட்டா நல்லா இருக்காது.

---->o<----

2 comments:

Anonymous said...

Very nice...really a touching story..nerula nadakara mathiri iruku varthaigal

Unknown said...

அசத்திட்டீங்க மோர