Monday 31 March 2014

எம் பெயரை எங்கு எடுத்துச்சென்றாலும் பிரச்சினைதான்.

இப்ப TNEB க்கு புது இணைப்புக்காக போயிருந்தேன். விண்ணப்பத்தை நான் சுயமாக நிரப்ப முடியாது அங்கு இருக்கும் ஏஜெண்டு மூலமாகத்தான் போகனும்.

ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன் என் பெயரை எழுதும்போது தவறு செய்யக்கூடாது என்று மேலும் ஒரு துண்டு சீட்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுது கொடுத்துவிட்டேன்.

இருந்து மீண்டும் மீண்டும் அந்த ஆள் பிழைகள் செய்ய ஒரு கட்டத்தில் பேனாவை கொடு நானே பெயரை மட்டும் எழுதி தந்துவிடுகிறேன் என்று கேட்டு வாங்கி எழுதினேன்.

“ தம்பி என்ன முஸ்லீமா ?” எரிச்சலுடன் கேட்டார் எந்த ஏஜெண்ட்.

“ இல்ல , எதுக்கு கேக்குறீங்க “

“ இல்ல துலுக்கனுங்கதான் ஒரு எழுத்து கூட மாறாம அப்படியே வரனும்னு சொல்லுவானுங்க” என்றார்.(பொதுவாகவே இஸ்லாமியர்கள் பெயர் எழுதுகையில் தமிழ்ப்பெயராக இல்லாமல் இருந்தால் பிழைகள் வர வாய்ப்புண்டு.)

அதற்கு மேல பொறுக்க மாட்டாம ”யார் எத எழுத சொன்னா உனக்கென்ன ? கேக்கற எழுதிக்கொடுக்குறதுக்குத்தான காசு வாங்குற அதுக்குத்தானே உனக்கு லைசன்ஸ் கொடுத்துருக்கு” ன்னு கேட்டேன்.

”தம்பி நீங்க ஏன் கோவப்படுறீங்க விடுங்க” ன்னு பக்கத்துல இருக்கவரு சமானத்தபடுத்த ஆரம்பித்துவிட்டார்.

நீ முஸ்லீமா ?

ஹே ஆர் யூ எ முஸ்லீம்?

கியா ஆப் முசல்மான் ஹோ?

இப்படி எத்தனதடவதான் கேப்பானுங்களோ தெரியல அப்படி கேக்குறது தப்பில்ல அந்த தொணி இருக்குல்ல அதுதான் கடுப்ப கிளப்புது. இப்படியே கேட்டு ஒரு நாள் என்னையும் முஸ்லீம் ஆக்கப்போறானுங்க.

# அது சரி என்ன நடக்கனும்னு எழுதிருக்கோ அது நடந்தே ஆகும் அது இஸ்லாத்தை தழுவுவதா இருந்தாலும்.

# எனக்கு தெரிந்தவரையில் மொராரி என்பது கிருஷ்ணரின் பெயர் அதோடு மரியாதைக்கு ஜி சேர்த்து மொரார்ஜி எனப்படுகிறது.

Friday 8 March 2013

பிஸ்துரூபம்


எங்க அலுவலகத்தில் நான் மேலாளராய் சேர்ந்த நாள் முதற்கொண்டே என்னோடு ஒட்டிகொண்டவன் பிஸ்து.

நெற்றில் நெடுங்கோடும் ஆழ்வார் பாசுரங்களை அச்சு பிழராமல் பாராயணம் செய்யும் பழக்கமும் என்னிடம் இருந்ததுதான் காரணமென்று பின்னாளில் சொன்னான்
 ​.​

சேர்ந்ததுமே எனக்கு அறிமுகமானவன் பிஸ்து .அவன் பெயர் மணிகண்டன் தான் இருந்தாலும் நான் அவனை பிஸ்து என்றே அழைப்பேன்.

கல்லூரி வாழ்க்கையில் பிஸ்து என்று யாரையாவது அழைத்தால அவனுக்கு எல்லாமே தெரியும்னு அர்த்தம்.

நம்ம பிஸ்துக்கு தெரியாததே இல்லை எனலாம். கவிதை கட்டுரை இசை எல்லாத்துலயும் ஒரு ரவுண்டு வருவான்.குறிப்பா மொட்ட கடுதாசி போடுவதில் வல்லவன்
 ​.
இது 
​பற்றி 
 பேசினா
​ல்​
 எங்க தாத்தாவோட சாரீரம் அப்படியே எனக்கு வந்திருக்கிறதா அம்மா சொல்றான்னு சொல்லுவான்.நிறைய பத்திரிகைகளில் கதை கட்டுரை எழுதுவான்.

தனக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு அவனுக்கு அதை விட தன்னை யாரும் ஏமாற்றிவிட முடியாதென்ற எண்ணம் கூட.

உதாரணம் நாங்க இண்டர்வியூ எடுக்கும்போது திடீரென்று ஒரு ப்ரொஃபைலை ரிஜெட் செய்வான். ஏ
 ​ன்​
டான்னு கேட்டா
​ “​
அவன் மார்க்க பாத்தியா சுமார் ரகம் தான் ஆனா எங்க படிச்சிருக்கான் பாரு 
​CIT 
ல .அப்படின்னா என்ன அர்த்தம் ?
​”
​”​
என்ன அர்த்தம் 
​?” , நான்
 
​”​
எல்லாம் அந்த இழவு இட ஒதுக்கீடுதான்
​ . 
அவன் அந்த *** சாதியாதான் இருப்பான்
 ​” என்று
 சொல்லி சிரிப்பான்.

​”​
நோகாம நோம்பு கும்பிட வந்துடுவானுங்க.நல்ல வேளை தனியார்ல இல்ல இல்லன்னா நம்மளயேதூக்கி சாப்பிட்டிடுவானுங்க.
 ​”​ என்பான்.

​”​
அப்படியெல்லாம் பார்க்க கூடாதுடா
​”​
 என்று சொன்னால். 
​”​
நீ குலம் கெடுக்க வந்த கோடறி காம்பு
​”​
 என்று திட்டுவான்.அதவிட 
​”​
உனக்கும் உம் புள்ளைகளுக்காகவுதான் பேசுறேன்னு சொல்லுவான்
​”​
.

சின்ன வயசுலயே அப்பாவை இழந்துட்டான் நம்ம பிஸ்து.அவர் இருக்குற வரைக்கும் ஏதோ புரோகிதம் பண்ணி குடும்பத்த காப்பாத்திருக்கார். அவர் போனதுக்கு பிறகு மாமா வீட்டுலதான் ஒண்டிக்குடுத்தனம்.
இந்த கஷ்டத்துல வந்த பிஸ்துக்கு நல்லா ட்ரெஸ் பண்ணி பிள்ளைய தூக்கி வந்து ஸ்கூல்ல விட்டுட்டு போற அழுக்கு வேட்டி ஆட்களை பார்க்கும்போது ஏதோ ஒரு இனம்புரியாத வெறுப்பா இருந்தது.பின்னொரு நாளில் அவங்களுக்கு மட்டும் ஏதோ அரசாங்கத்துல இருந்து பணம் வருவது கண்டு எரிச்சலுக்கு உள்ளானான். 

வீட்டுக்கு சென்றதும் எனக்கும் அது மாதிரி அரசாங்கத்துல இருந்து பணம் வராதாம்மா என்று அம்மா கிட்ட கேட்டு வச்சான்?

அவங்க ஏழை பாழைங்கடா 
​அதனாலதான் ​
அவ
​ங்க​
ளுக்கு அரசாங்கம் சலுகை பண்ணுதுன்னு அம்மா சொன்னா?

அப்ப நாம மட்டும் ஏழை இல்லையா. நமக்கும் சலுகை கொடுத்தா நானும் அர்ஜூன் மாதிரி நல்ல ஸ்கூல்ல படிப்பேன்ல என்று கேட்டான்.

அர்ஜூன் பிஸ்துவின் மாமா பையன் ஊரில தரமான பள்ளியில் படித்து வந்தான்.இப்போ அவன் நாஸாவில் பணிபுரிகிறான்.

தன்னால் அப்படி ஆக முடியாத சுய கழிவிரக்கம் இடஒதுக்கீடு,ஸ்காலர்ஷிப் ஆகியற்றின் மேல் குறிப்பா அதை பெறுபர்கள் மேல் பெரும் வெறுப்பாக மாறியிருந்தது பிஸ்துக்கு.

இது பெரிதாய் மாறி ஒரு தீராத வெறுப்பாக உருவாகியிருந்தது அவனுக்குள்.

இப்படித்தான் இருவரும் ஒரு நாள் மாலை 
​அலுவலகத்தில் இருந்து ​
வீடு திரும்பும்போது டெலிபோன் லைன் போடும் குழி தோண்டும் வேலை செய்துகொண்டிருந்த குடும்பம் ஒண்றை கண்டோம்.

ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது அந்த குழந்தையின் அம்மா டீயும் பண்ணும் கொடுத்து கொண்டிருந்தாள். சேலையில் சேறும் சகதியுமாக சம்மட்டியை ஓரத்தில் சாய்த்து வைத்திருந்தால்.
குழந்தையின் தகப்பன் உடல முழுக்க மண்ணோடு உட்கார்ந்து புகையிலை போட்டு துப்பிக்கொண்டிருந்தான்.குழந்தைய ஆசுவாசப்படுத்த தேநீர் பருக சற்று அமர்ந்திருக்க கூடும்.

பிஸ்துக்கு வந்துச்சு பாருங்க கோவம் 
​”​
ஆறு மாசமா 100 அடியவே நோண்டிகிட்டு இருக்கானுங்க சண்டாளனுங்க
​​
. எப்படித்தான் இப்படி உக்காந்துகிட்டே சோறு திங்கிறானுங்களோ தெரியலை
 ​” ​
ன்னு கோவப்பட்டான்.
அன்று மாலைதான் அலுவலத்தில் தேநீர் அருந்தும்போது ரெண்டு மாசத்துக்கு ஃப்ரீஸ் பீரியட் என்பதால் ஒரு வேலையும் தன் ப்ரோஜெக்டில் கிடையாது எனவும் மனைவியோடு அவுட்டிங் போகலாம் என்று திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னான்.

இப்படி இருந்தாலும் அலுவலக விஷயமா ஏதாவது பொது நிகழ்ச்சிகள் , தொண்டு நிறுவனங்களுக்கு செல்லுதல்னு ஏதேனும் ஆரம்பித்தால் பிஸ்து முன்னாடி நிப்பான்.இது மாதிரியான செயல்பாடுகளாலேயே பிஸ்துவின் உள் மன எண்ணோட்டம் யாராலும் கண்டுபிடிக்க முடியாவண்ணம் இருந்தது.

பிஸ்து பெரிய பெண்ணிய வாதி. அவன் கதை கட்டுரைகள் அனைத்திலும் பெண்ணை போற்றியும் அவர்கள் பிரச்சினை பற்றி பேசியும் இருக்கும்.

வீட்டுக்கு 
​என்னை ​
தொடர்ந்து அழைத்தபடியே இருப்பான். மத்த நண்பர்களிடம் சொன்னால் ஆச்சர்யப்படுகிறாகள் அவன் யாரையும் 
​இது வரை வீட்டுக்கு ​
அழைத்ததே இல்லையென்று.

ஏற்கனவே போய் வந்தது கிருஷ்ணம்மாச்சாரிதான். அவன் பிஸ்துவின் விரும்ந்தோம்பல் பற்றி சொல்லி இருப்பதால்தான் எனக்கு தயக்கம். குறிப்பாக காப்பி சரியில்லை என்று என்னால் பிஸ்து காப்பி டம்ளரை தன் மனைவி மீது வீ
 ​சு​
வதை நான் விரும்பவில்லை.

பிஸ்துவின் பெண்ணிய சிந்தனையிலும் ஒரு அரசியல் இருக்கும். சின்மயி விவகாரம் வந்தோபோது கொதித்தெழுந்து பதிவு பொட்டான்.ராஜனை அரெஸ்ட் செய்ததும் சாமீ கூலி கொடுத்துடுச்சின்னு சந்தோஷப்பட்டான்.

ஆனால் ஈழப்போரில் கருவறுக்கப்பட்டு கிடந்த கற்பினி+கரு சடலங்களை டிவியில் காண்பிக்கும்போது இவங்களுக்கு ஏன் தான் இவ்வளவு திமிறு ஏன் இப்படி போராடனும் அமைதியா அரசாங்கம் சொல்றபடி இருக்கலாம் இல்லன்னா வெளிநாட்டுக்கு போகலாம்ல என்பான்.

நான் அலுவலகத்தில் இருக்கும்போது திடீரென்று வீட்டிலிருந்த கால் பண்ணுவான்.என்ன வென்று விசாரித்தால்
 ​ 
எம்மாம் பெரிய ஊழல் இது . நாட்டையே குட்டி சுவராக்கிட்டானுங்கன்னு அலுத்துக்குவான்
 ​.​

என்னடா ஆச்சு என விசாரித்தால். 2ஜி கேஸ்ல இருந்து ராசாவுக்கு ஜாமீன் கொடுத்திருக்காங்களாம் என கடுப்போடு சொல்வான். 

பின்ன சிரிச்சுகொண்டே இவன் இங்க்லீஷ பாரேன்ன்னு சொல்லி ஊழலுக்கு மிகவும் முக்கியமான ராசாவின் ஆங்கில புலமை பற்றி பேசி கிண்டலடிப்பான். 

செய்தியில் தொடர்ச்சியாக வரும் ஜெயலலிதாவின் ஆங்கில பேட்டியை ஒப்பிட்டு அடடா என்ன அட்மினிஸ்ட்ரேஷன் என்ன ஸ்பீச் பாருன்னு சொல்லி பெருமிதம் கொள்வான்.

கடைசியா எல்லாம் இருக்குற இடத்துல இருக்கனும் பாத்தியால்லியா நாடே வெக்கி தல குனியுது அம்மாம் பெரிய ஊழல் என்று சொல்வான்.

இந்நிலையில், பிஸ்து கொல்கத்தா வரை அலுவலவ விஷயமாய் போயிருந்தான்.

திடீரெ
 ​ன்று​
 இரவு 10 மணி இருக்கும் கால்  செய்து தன் மனைவிக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாவும் விஜயா ஹாஸ்பிடலில் இருப்பதாகவும் நாளை காலையில் 
​எப்படியாவது ​
சென்னை 
​​
வந்துவிடுவதாகவும் சொன்னான் .உடனே போய் பார்த்து உதவ முடியுமாவென்று கேட்டான்.

​உடனே அலுவலகத்திலிருந்து கிளம்பி போய் ​
 பார்த்தேன். 
​இடது விலா பகுதியில் நன்கு​ அடிபட்டிருப்பதாகவும் 
கண்டிப்பாக சர்ஜரி செய்யவேண்டும் என்றும் O-ve ரத்தம் தேவை என்றும் டாக்டர் சொன்னார்.

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சட்டென்று மனசுக்குள் வந்தவன் கலியதாஸ்தான்.நல்ல திறமை சாலி மிகுந்த கஷ்டத்துக்கு இடையில் மேலே வந்தவன்.

இடஒதுக்கீட்டில் படிச்சவன் தான் NEC இல் கோல்டு மெடல் வாங்கியவன். இவன் நேர்காணலின் போது பிஸ்து விடுமுறையில் இருந்ததால் தப்பித்து உள்ளே வந்தான். அவன் நல்ல நேரம் என்னுடைய அணியில் சேர்ந்துவிட்டான்
 ​ நானே விரும்பி எடுத்துக்கொண்டேன்.​

மிகுந்த சமூக அக்கறை உள்ளவன்.ஆறு மாசத்துக்கு ஒரு முறை ரத்தவங்கிக்கு போய் ரத்தம்தானம் செய்வான்.
​சமூக 
பிரச்சினைகளில் போராட்டங்களில் பங்கெடுப்பவன்.

பிஸ்துக்கு கலியதாஸை சுத்தமாக பிடிக்காது அவனது திறமை மீது குற்றம் சொல்வதாகவே இருப்பான். ஆனாலும் என்னை தாண்டி ஏதும் செய்ய முடியாது என்பதால் வெறும் பேச்சோடு நிறுத்திக்கொண்டான்.

கால் பண்ணி தம்பி எங்கடா இருக்கேன்னு கேட்டேன்.இதுக்கு கூட பிஸ்து இருந்தா கோவப்பட்டிருப்பான். 
​”
 ​
அதென்ன அந்த ****** தம்பின்னு உறவு கொண்டாடுற அவன் யாரு நாம யாரு பட்டும் படாம இரு.இடத்த கொடுத்த மடத்த பிடிச்சுருவானுங்க அவனுங்க
 ​” என்பான்.
எனக்கு அலுவலகத்துக்குள்தான் மானேஜர் சப் ஆர்டினேட்ஸ் வெளியில் சகோதர்கள் போலவே.
அதனால் விஷயத்தை சொன்னதும் உடனே அடித்து பிடித்து மடிப்பாக்கத்தில் இருந்து வடபழனி வந்து ரத்தம் கொடுத்தான். தேவையான அறுவை சிகிச்சை முடிந்தது.இடையில் என் மகளுக்கு மூச்சு திணறுகிறதென்று வீட்டிலிருந்து மனைவி அழைத்தலால் என்ன செய்வதென்று தெரியமல் நின்றேன்.
கலியதாஸ்தான் நீங்க கிளம்புங்க
​ அண்ணா ​
 நான் பார்த்துக்குறேன்னு சொல்லி அனுப்பினான். கொஞ்சம் பணத்தை எடுத்து அவன் கைல திணித்துவிட்டு மணி 02:30 இருக்கும் வீடு கிளம்பினேன்.

அண்ணா நான் பார்த்துகொள்கிறேன் கிளம்புங்கள் என்றான். நாளைக்கு நீ லீவ் எடுத்துக்கோ நான் பார்த்து
 ​க்கொள்கிறேன்.​
 நான் காலைலயே ஹாஸ்பிடல் வந்துடுறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன்.

காலையில் மருத்துவமனை சென்ற போது பிஸ்து ஏற்கனவே வந்திருந்தான். கலியதாஸும் கிளம்பாமல் தூக்கம் இழந்து காணப்பட்டான்.

சென்றதும் என் கை கண்டசதையை பற்றி ஒரு ஓரமாய் இழுத்துபோனான் பிஸ்து.

”உன்னைத்தானே இருந்து பாத்துக்க சொன்னேன் அவனை ஏன் வர சொன்ன என்று கடிந்துக்கொண்டான்.”
இல்லை ரத்தம் கொடுக்க....என்று நான் இழுத்த போது

கடும் கோபமடைந்த பிஸ்து ஏன் நீ கொடுக்க வேண்டியதுதானே போயும் போயும் அந்த *****
 ​(சாதியையும் பிறப்புறுப்பையும் ஒரே சேர சொல்லி)​
 ஆ என இழுத்தான்....

நான் சட்டென சுதாரித்து ”  இல்லை ரத்த வங்கிக்கும் செல்ல வேண்டியிருந்தது அதான் அவனை அழைத்தேன்” என சொல்லி மாற்றிவிட்டேன்.

ரத்தம் கொடுப்பதில் குறிப்பிட்ட ரத்த பிரிவுக்கு ஒத்த ரத்த பிரிவுதான் ஏற்கும் என்ற சிந்தனை கூட மறந்துவிட்டான் போலும் ஒரு கணம்.

ஒரு வேளை கலியதாஸ் ரத்தம் பிஸ்துவின் மனைவி உடலில் ஓடுகிறதென்று சொல்லியிருந்தால் அவளை விவாகரத்து கூட செய்திருப்பான் பிஸ்து.

மனசு கேட்கவில்லை
 ​ எனக்கு​
 கண்ணால் சைகை காண்பித்து கலியதாஸை அழைத்து கிளம்புடா என்றேன். அவனுக்கு ஏதும் புரியவில்லை 
​” ​
ஏன்ண்ணா
​ ?​
 . இன்னைக்குதான் லீவ் எடுத்துக்க சொல்லிட்டீங்களே
 ​ பிறகென்ன ?​”

​”​
கொஞ்சம் நேரம் இருந்து உங்களுக்கு உதவி ஏதும் வேணும்னா செஞ்சிட்டு போறேன்
​”​
னு சொன்னான்.

​”​
பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் கிளம்பு
​”​
 என சொல்லிவிட்டேன்.

அரை மனதோடு கலியதாஸ் கிளம்பி போனான்..

​எனக்கு வந்த கோவத்துக்கு இந்நேரம் ​
நானும் கிளம்பியிருக்கனும்
​ .​
 பிஸ்து என்னொடு இவ்வளவு நெருக்கம் பாராட்டுவதற்கு காரணம் நான் அவன் சாதி என்றாலும் நான் அவனோடு நட்பு பாராட்டுவதற்கு நட்பும் அடிப்படை 
மனிதநேயமும்தான் என்று எப்படி சொல்லி விளக்க
 ​.​

எண்ணியபடி மருத்துவமனை வெயிட்டின் பெஞ்ச்சில் 
​தலையை ​
குணிந்த படி இருக்கேன்.

Thursday 17 January 2013

இதய தெய்வத்தின் இருதய சத்தம்

சரி தலைவன் பிறந்த நாள் இன்றைக்கு ஒரு நிகழ்வ சொல்லுறேன். 

அப்பாவ சென்னை அழைத்து வந்திருந்த போது. குடும்பத்தோடு மெரினாவுக்கு போய் பொன்மன செம்மலின் இதயம் அங்கு உறங்கிக்கொண்டிருக்கிறதல்லவா அதை பார்க்க போயிருந்தோம்.

நான் சிறு வயதா இருக்கும்போதே எம் ஜி ஆர் சமாதியில் காது வைத்து கேட்டால் அவர் கையில் கட்டியிருந்த கடிகாரம் இன்னும் ஓடும் சப்தத்தை கேட்கலாம் என்று ஊரு பெருசுகள் சொல்லி பீலா விடுவதை கேட்டிருக்கிறேன்.

மெரினாவுக்கு போனதும் அப்பா அதிமுக வேட்டியை மடித்து கட்டிகொண்டு சற்றே திமிருடன் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திலுருந்து சமாதி வரை நடந்து வந்தார். ”வடிவேல் ஒரு படத்துல போலீஸ் கிட்ட அடிவாங்குவானே நீ அது மாதிரி அடி வாங்க போற பாரு. வேட்டிய இறக்கி கட்டு”, அம்மா சொன்னார் .” நடக்குறது எங்க ஆட்சி எவன் என் மேல கை வைக்க முடியும் “ இது அப்பா .

இவ்வளவு பீத்திக்கொண்டு வந்தவர் எம் ஜி ஆர் சமாதி உள் நுழைந்ததும் மடித்ததை இறக்கி விட்டுக்கொண்டார்.

இந்த கடிகாரம் மேட்டர் எந்த அளவு பிரபலமா இருக்கு பாருங்க. எங்க முன்னாடி சென்ற ஒரு தெலுங்கர் கூட்டம் கூட சமாதியின் மீது காதை வைத்து கேட்டுக்கொண்டே இருந்தது.

இரண்டு சித்தப்பாக்கள் நான்கு அத்தைகள் என ஒட்டுமொத்த குடும்பமும் அதிமுக ஆதரவானது என் அம்மா மட்டும் தீவிர திமுக அனுதாபிஅவர் குடும்பமும் அப்படியே .கலைஞர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ”கொல்றாங்கோ கொல்றாங்கோ” ன்னு கத்தியபோது நான் டிவியில் பார்த்து சிரித்தேன் என் அம்மா அழுதார்.

அவர் கூட வந்தால் சும்மா இருப்பாரா . அப்பாவும் முன் சென்று சமாதியை வணங்கிகிட்டு சமாதி மீது காதை வைத்து கேட்டார்.

அம்மா சொன்னார் கடுப்புடன் நக்கலாக சிரித்துகொண்டு ,” என்னாடிது ஒன்னுந்தெரியாத மக்கதான் காத வச்சு கேக்குதுன்னா நீயுமா”

அப்பா நிதானமாக சொன்னா “ கடிகாரம் இப்ப சத்தம் போடாதுன்னு எனக்கும் தெரியும் நான் அவர் இருதயம் துடிக்கும் சத்தம் கேக்குதான்னு பார்த்தேன்”

பின்ன ஏன்ய்யா அதிமுக ஜெயிக்காது :-)

Friday 12 October 2012

வேளச்சேரியில் சதர்லேண்டுக்கு எதிர்ல் ஒரு சிறு ஹோட்டல் இருக்கிறது இரவு முழுவதும் திறந்திருக்கும்.

ஒரு நாள் இரவு அங்கே போனபோது ஒரு வயாதான பெண்மணி வந்து காசு கேட்டார். காசு கொடுப்பதை விட உணவு வாங்கி கொடுன்னு சுப்ரமணி(எங்க அப்பாருதான்)சொல்லிருக்கார். 

அதனால நானும் என்னம்மா வேணும்னு கேட்டேன் . அவர் சொன்னார் , “ ரெண்டு பூரி வாங்கி கொடுப்பா”. 

வாங்கி கொடுத்ததும் எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந
்து சென்றார்.

மீதி சில்லரை வாங்கிவிட்டு எதிரே இருந்த மெடிக்கலுக்குள் நுழைந்துவிட்டு திரும்பினேன்.

மீண்டும் அந்த வயாதான பெண்மணி இன்னொருவரை கேட்டு மற்றொரு முறை பூரி வாங்கி கொண்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்.

எனக்கு கொஞ்சம் குழப்பம்.நானும் பொல்லாத தானம் பண்ணிட்டேன்னு திமிரு வேற. இந்தம்மா நாம் வாங்கி கொடுத்ததை சாப்பிட்டுருக்க கூட முடியாது அவ்வளவு சீக்கிரத்தில். மீண்டும் எதுக்கு வாங்கிட்டுப்போகுது இது மாதிரி எத்தனை பேருக்கு வாங்கிட்டுபோகும்னு ? 15 ரூபா சல்லிக்காச கொடுத்திட்டு ஏதோ 10 லட்ச ரூபா நம்மள ஏமாத்திட்டு அந்தம்மா என்பது போன்ற பிக்காரித்தனமான நினைப்பு எனக்குள்.

ஹோட்டலுக்கு பக்கத்தில் வெளிச்சம் குறைவான இடத்தில் ஒரு முதிர்ந்த வயது ஆண் அழுக்காக ஆடையோடும் செம்பட்டை நிறத்து கேசத்தோடும் அவர் கையில் பிரித்து வைக்கப்பட்ட பூரிப்பொட்டலத்தோடு அமர்ந்துக்கொண்டிருந்தார். அவர் இந்த பெண்மணியின் புருஷனாய் இருக்க கூடும் . காலில் அடிப்பட்டிருந்தது .இந்த வயதான பெண்மணி அவரோடு அமர்ந்து , கொண்டு சென்ற மற்றொரு பொட்டலத்தை பிரித்து சாப்பிடலானார்.

இந்த பெண்மணி முதலில் வாங்கிச்சென்றது அவருக்காக என பிறகுதான் புரிந்தது.

நாற்று நடும் பெண்கள்,பருத்தி எடுக்கும் பெண்கள், சித்தாலாக சிமெண்ட் தூக்கும் பெண்கள் , பள்ளியில் ஆசிரியையாய் இருக்கும் பெண்கள்,ஐடியில் எஞ்சியனராய் இருக்கும் பெண்கள்,சினிமாவில் கதாநாயகியா இருக்கும் பெண்கள்

இப்படி எல்லா பெண்களும் தங்கள் உலகத்துக்குள் அவர்கள் அப்பன் , சகோதரன் , கணவன் என்ற ஆண்களை தூக்கி சுமக்கிறார்கள் .

Tuesday 21 August 2012

தாராசுரம்

சில வாரங்களுக்கு முன் ஒரு வார விடுமுறை மாலைப்பொழுது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தேன்.கும்பகோணத்தில் இருந்து மினி பேருந்துகள் அடிக்கடி செல்லும்.10 நிமிட பயணம்தான் 3 கிமீ இருக்கலாம்.மிக இனிமையான பொழுதாக மாற்றியது அந்த இரண்டாம் ராஜராஜசோழன் கட்டிய பொக்கிஷம். பொக்கிஷம்தான் அது. யுனெஸ்கோ அமைப்பு பாதுகாப்பட்ட வேண்டிய பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது இந்த கோவிலை.

நாம கோவிலுக்கு போகமலே ஒரு ஆறு மாசம் இருப்போம். அப்புறம் கொஞ்ச நாள் வெவ்வேறு சிவன் கோவிலா தேடிதேடி ஓடுவோம் பித்து தலைக்கேறி அது தனியும்வரை. இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கு. அப்படி கடந்த சில மாசமா போய்கிட்டே இருக்கேன்.

பொதுவா கோவிலுக்கு உள்ளே போனால் ஆரம்பத்துலயே நாளு பிச்சைக்காரர்கள்,சற்று கடந்து சென்றால் கடைகள் வாங்கம்மா,வாங்கையான்னு அர்ச்சனை,தேங்காய்,பழம் அழைப்புகள்.அதை தாண்டிப்போனா இங்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் அன்னதானம் வழங்கப்படுகிறதுன்னு பெரிய்ய போர்டு.அதை தாண்டி உள்ளே போனா காசு இருக்கறவனுக்கு ஒரு வழி காசில்லாதவனுக்கு ஒரு வழின்னு ஏற்பாடு.

இதெல்லாம் தாண்டி உள்ளே போனா சாமிகிட்ட போய்ச்சேர்வதற்குள்ளேயே “நிக்காதிங்க நிக்காதிங்க போயிகிட்டே இருங்கன்னு ஒரு குரல் வரும்” நம்ம வாயிக்குள்ள போடாங்க்கோகோகோன்னு வரும். இருந்தாலும் சாமீ கோச்சுக்குமேன்னு கடந்து போகவேண்டியிருக்கும். சரின்னு நிக்கிற ரெண்டு நிமிஷத்துக்குள்ள ஐயர் தேவ பாஷையில்  ஏதோ கடமைக்கு சொல்லித்திரும்பி நம்ம கைல திருநீற்றை தெளித்துவிட்டு போக.இடையிலே ஏதோ தீபாராதனைக்கு மட்டும் சாமி வந்து வந்து மறைந்து போவது போல எல்லாரும் முண்டியடித்து நம்மை மறைத்துவிட்டு சாமியை பாத்துவிட்டு போகச்சொல்லிவிடுவார்கள்.

அந்த ரெண்டு நிமிஷத்துள்ள பக்கத்துல நிக்கிற INTEL INSIDE டுன்னு டி ஷர்ட் பெண்ணை பார்த்து சரி உள்ள PROCESSOR இருந்தா என்ன வெர்ஷனா இருக்கும்னு நினைப்பேனா இல்லை சாமியை பார்ப்பேனா.இதுல சாமியும் கூட்டுக்களவானிதான்.அதிலும் கபாலிதான் ரொம்பச்சரியான ஆளு அவன பார்க்கப்போறப்போதான் இந்த மாதிரி டிஷர்ட் யுவதிகள் நிறையபேர் வருகிறார்கள்.

சரி இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன்னா மேற்சொன்ன கொடுமைகள் ஏதும் இல்லாத கோவில் தாராசுரம்.பசும்புல்வெளிகளுக்கு நடுவில் மிக அழகா அமைந்திருக்கிறது.உள்ளே சென்றால் ஒரு அசாதாரணமான அமைதி. அதை என்னென்று சொல்ல..ஹ்ம்ம்ம். நிச்சயமாய் ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கும். எந்த இடையூறுகளும் இல்லாத ஒரு தனிமை ஆனால் அது தனிமை கிடையாது. கடவுள்தான் கூட இருப்பாரே.

பல கோவில்களில் அர்ச்சகர்கள் அரசு மருத்துவமணை செவிலியர் மாதிரிதான் இருப்பார்கள்.இங்கே வேறுவிதமாய் இருக்கிறது.வாங்க வாங்க என்ற அன்பான அழைப்பு. சுக்லாம் பரதரமோ,வக்ரதுண்ட மஹா காயவோ இல்லாத விநாயகர் அர்ச்சனை தூய தமிழில்.

 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!

தென்னாடுடையவனுக்கும் அதேபோல “தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி பொற்றி” பாடிப்போற்றினார். இதுதான் மிகவும் ஜிலிர்ப்பாக இருந்தது.

இந்த கோவில் மயிலாடுதுறை மாயுரநாதர் திருக்கோவில்,சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில்,சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பிறகு கட்டியிருக்கனும் என்று நினைக்கிறேன்.கோவில் விமானத்தை உற்று நோக்கினால் இந்த கோவில்களின் வரலாறு சொல்லும் சிவனின் ரூபங்கள் சிலையாய் இடம்பெற்றிருக்கின்றன்.

கோவில் பலி பீடத்தை தட்டினால் வித்தியாசமான ஒலி எழுப்புகிறது என தகவல் இருக்கு.அங்கே சென்றிருந்தபோது அந்த பலி பீடத்தில் ஏறும் படி முழுவதும் சுற்றி இரும்பு கம்பிகளால் வேயப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தது.அப்போது ஏன் என்று புரியவில்லை.இனையத்தில்தான் இந்த தகவலை கண்டேன்.

குழல் ஊதுறவன் சிலையும்,சங்கு சக்கரம் தாங்கியவன் சிலையும் கூட இடம்பெற்றிருக்கு.வைணவர்களை சைவர் கழுமரம் ஏற்றிக்கொன்றார்கள் என்றால் இது எப்படி சாத்தியம்.எங்கோ இடிக்கிறதே..கோவிலுக்கு பின்புறம் மேற்கு பக்கத்தில் வீரபத்திரர் கோவில் இருக்கிறது கிட்டதட்ட இடியும் தருவாயில்.

கோவிலுக்குள் ஒரு சிறு குப்பை கூட இல்லை.ஆனா கோவிலை விட்டு வெளியே வந்தா குப்பைகளும் மூத்திர நாத்தமும்.திருந்தவே மாட்டீங்களாடா? 




Monday 20 August 2012

பார்த்தன் பள்ளி

சிட்டி சொகுசு வாழ்க்கை கத்து தந்ததை விட கிராமம் எனக்கு நிறைய கத்து தந்திருக்கிறது. ஒவ்வொரு முறை கிராமத்துக்கு போகும்போதும் அது சில கேள்விகளை என மனத்தாளில் எழுதிவிட்டு அடுத்த முறை வரும்போது பதிலோடு வா என்று சொல்லிவிடும்.


இந்த முறை கிராமத்துக்கு வந்ததால் எழுந்த கேள்விகள் இரண்டு......


1.கோவில் கருவறைக்கு வெளியில் நிற்பவனை விட உள்ளே நிற்பவன் தான் நிசமாலுமே கடவுள் மறுப்பாளனோ?


2.திருப்பதி போன்ற பெரிய ஸ்தலங்களுக்கே அடித்து பிடித்து ஓடும் மக்கள் நிசமாலுமே ஆன்மீக புரிதல்களோடுதான் செல்கிறார்களா இல்லை வெறும் ஆட்டு மந்தைகள்தானா?


ஏன் இப்படி எலக்கியவாதி மாதிரி பேசுற? சொல்லவந்தத சொல்லுடேன்னு நீங்க முனகுறது கேக்குது...சொல்றேன்.


நகரத்து கோவில்களை விட மிக பழமையான கோவில்கள். மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில்கள் தஞ்சை நாகை மாவட்டத்தில் நிறைய இருக்கின்றன. ஒரு வாரத்துக்கு ஒரு கோவில் என்றால் கூட புது புது கோவில்களாக சுற்றிக்கொண்டே இருக்கலாம் வருடம் முழுக்க.


இப்ப ஒரு கொசுவத்திய சுத்துவோம்.......


20 வருஷத்துக்கு முன்ன நான் ஒரு உறவினர் வீட்டுக்கு போயிந்தபோது அந்த கோவிலை ஒட்டிய குளத்தில் பால்ய கூட்டாளிகளோடு தம்பட்டம் அடிப்போம் தினமும். ஒரு வைணவ கோவில் அது. பார்த்தன் பள்ளி பெயர்.திருவெண்காட்டில் இருந்து 2 கிலோ மீட்டரில் இளையமது கூடம் செல்லும் வழியில் வரும்.அருகில் உள்ள ரயில் நிலையம் சீர்காழி.சீர்காழியில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் வரும்.நாகப்பட்டினம் நெடுஞ்சாலை வழியாக வருவோர்கள் அல்லிவிளாகம் எனும் ஊரில் இருந்து குறுக்கே 4 கிலோ மீட்டர் தொலைவிலும் வரலாம்.


சுத்துகட்டு சுவர் இல்லாத கோவில் குளம் .3 அடுக்கு பெரிய கோபுரம்.பெரியதும் இல்லாமல் சிறியதும் இல்லாத ரக கோவில் அது. 108 திவ்ய தேசங்களுல் 40 வதாக வரும் . திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலம் அது.அவற்றுள் எட்டாம் திருமொழியில் இருந்து சில பாசுரங்கள்.



கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், காமருசீர்க்

குவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும்,

தவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும்,

பவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.


கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிற டர்த்த காளையென்றும்,

வஞ்ச மேவி வந்தபேயின் உயிரை யுண்ட மாயனென்றும்,

செஞ்சொ லாளர் நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,

பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.


அண்டர் கோனென் னானையென்றும் ஆயர் மாதர் கொங்கைபுல்கு

செண்ட னென்றும், நான்மறைகள் தேடி யோடும் செல்வனென்றும்,

வண்டு லவுபொழில் கொள்நாங்கை மன்னு மாய னென்றென்றோதி,

பண்டு போலன் றென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.


இந்த முறை விடுமுறையில் அந்த கோவிலுக்கு போகனும்னு ஒரு ஆசை வந்தது.ஒரு மாலைப்பொழுதில் நண்பனோடு TVS 50 யை எடுத்துக்கொண்டு 6 கிலோ மீட்டர் அடர்ந்த சவுக்குகாடும்,தென்னை மரங்களும்,சோளக்கொல்லையும் நிறைந்த பாதையில்  பயணித்தோம்.மாலை மங்கி இரவும் சூழும் நேரம் வையில் நிறைய மயில்கள் மேய்ந்துக்கொண்டிருந்தன .ஊரில் ஏற்படும் மாற்றங்களை பற்றி பேசியபடியே கோவிலை அடைந்தோம்.


கண்டதும் கலங்கி போனேன் அது இருந்த நிலை கண்டு.சுற்றுச்சுவர் சாயும் நிலையில்.கோயிலுக்குள் நுழைந்ததும் அபொகலிப்டோ படத்தில் தலை எடுத்த முண்டங்கள் கொட்டி வைத்திருக்கும் மேடு போல ஊனமான சிலைகள் கொட்டி கிடக்கின்றன.கோவில் பிரகாரத்துக்குள் குப்பைகளும் நாய்க்கடுகு போன்ற செடிகளும் நிறைந்து கிடக்கின்றன.

வெறுங்காலால் நடக்க முடியாத படி இருந்தது. மூலவர் சன்னதி பூட்டி கிடந்தது .சரி ஒரு சுத்து சுத்தி வருவோம்னு  பார்த்தா ஆச்சர்யம் கோவில் சுவரை சேர்த்து வைத்து புத்தம் புதிதாக ஒரு ரூம் கட்டி வெள்ளையடித்திருக்கிறார்கள் பிரகாரத்தில் நடக்கும் விசாலமான இடத்தை அடைத்து. எதுக்கு என்று விசாரித்தால் வெளியூர்ல இருந்து யாரேனும் வந்தால் தங்குவதற்காம்.

அடங்கொன்னியா?...... சாமிக்கே சைக்கிளாம் பூசாரிக்கு புல்லட்டாம்.

அடுத்து தாயார் சன்னதி பக்கம் வந்தா ஒரு தீபமும் இல்லை அதும் சுத்தம் செய்யாத குப்பையாக இருந்தது.சரி அர்ச்சகரை கூப்பிடலாம் என்றால் ஆளை காணோம். அவர் வீடு கோவில் வாசலிலே மூன்று மாடிக்கு கட்டப்பட்டு புத்தம் புதிதாக காட்சி தருகிறது.

கோவிலுக்கு வெளியே அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் பேச்சுகொடுத்தோம்.

ஐயிரா சார் அவர் நீங்கள்லாம் கூப்பிட்டா வரமாட்டார். சாயந்தரமா விளக்கு போடுவோம் அப்ப வாங்கன்னு சொல்லுவார்.நீங்க என்ன கார்லயா வந்திருக்கிங்க உடனே வந்து திறக்கறதுக்கு. அது சரி கார்ல வரவன் 100 ரூவா கொடுப்பான் நீங்க 5 ரூவா கொடுப்பீங்க? வேற கோவில் போறதா இருந்தா போயிட்டு திரும்பி வாங்க சார்”.

அது சரின்னு அவருக்கு நன்றி கூறி நடைய கட்டினோம்.அங்க இருந்து சுமார்கிலோ மீட்டர் தொலைவுல இருக்கற ஆழ்வார் திருநகரி கொவிலுக்கு போய்ட்டு திரும்பி வந்த போது கோவில் மூலவர் சன்னதி திறந்து கிடந்தது அப்பவும் அர்ச்சகர் இல்லை.ஆனால் போர்டு இருந்தது.வம்ச பரம்பரை அர்ச்சகர்கள்னு 1700 களில் இருந்து இன்றவரை போட்டிருக்கு.சிரிப்புத்தான் வந்தது.


மேற்சொன்ன இரண்டு கேள்விகளுக்கும் வருவோம்....


இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமிஅம்மன் கோவில் போயிருந்தேன்.

அமிர்தகடேஸ்வரர் கோவில்னு சொன்னாலே யாருக்கும் தெரியாது. ஆனா அபிராமி அம்மன் கோவில் என்றால் எல்லாருக்கும் தெரியும்.எதாலென்றால் அங்குதான் எல்லாரும் சஷடியப்தபூர்த்தி செய்வார்கள்.தன் பக்தனுக்காக எமனின் பாசக்கயிற்றையே தன் மீது தாங்கிய ஈசனின் பெருமை நிறைந்த தலம். ஒரு சிவ ஸ்தலம் ஒரு அம்மன் கோவில்போல அறியப்படுவது அங்க போய் தாலிகட்டிகிட்டா தகரத்துல அடிச்சுப்போட்ட மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கும்னு எவன் கிளப்பி விட்டானோ.

பாருங்க எல்லாருக்கும் கோவில் வரலாறு தெரியுமா அதெல்லாம் கிடையாது அபிராமி கோவில்ல போய்தான் 60 ஆம் கல்யாணம் செய்யனும்.

ஏன்?”

எல்லாரும் பன்றாங்க அம்புட்டுதேன்

கோவில் பிரகாரம் முழுக்க திருமணம் செய்ய சிறு மேடைகள் போன்ற அமைப்புகள் கும்பக்கலசங்களோடு சிறு யாக குண்டமும். போய் ஜோடியாக அமர்ந்து தாலி கட்டிகிட்டு சாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு திரும்பனும். இது மாதிரி திருமணம் செய்ய காசு கட்டனும். கோவிலுக்கு வெளியே நிறைய விடுதிகள் சுற்றுலா வாகனங்கள். எதுக்கு சொல்லுறேன்னா காசு நிறைய புழங்குவது நன்றாகவே தெரியும்.

ஆனால் அதே கோவிலுக்கு பக்கத்தில் அந்த கோவில் சுவரை ஒட்டியே இருக்கு இரண்டாயிரம் ஆண்டு பழமையான சிவன் கோவில் ஒன்று .கோபுரத்தில் அரசமரம் வளர்ந்து இடியும் தருவாயில் இருக்கின்றது அது.வெளவால்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றது.


அட எஞ்சாமி என் நிலை கொண்டு உன்னிடம் வேண்டுவதா இல்லை உன் நிலை கண்டு உனக்காக வேண்டுவதான்னு நினைத்துகொண்டே வெளியே வந்தேன்.


கிட்டதட்ட அதே நிலைதான் நேற்றும் பார்த்தன் பள்ளி பார்த்தசாரதியை கண்டதும்.


திருப்பதில இருக்கற பாலாஜிதானய்யா பார்த்தன் பள்ளிலயும் இருக்கான். திருப்பதிக்கு போய் கோடி கோடியா கொட்டுற நீங்க பார்த்தன் பள்ளி பார்த்தசாரதி போன்றவர்களை ஒரு எட்டு போய் பார்த்து ஏதும் செய்ய முடிஞ்சத செஞ்சீங்கன்னா அவனும் சந்தோஷமா இருப்பான் கண்டிப்பா உங்களுக்கும் சகலமும் கொடுப்பான்.சர்வ நிச்சயமாக திருப்பதிலயும்,பெங்களூர் இஸ்கான்லயும்,மைலாப்பூர் கபாலி கோவிலிளும் கிடைக்காத ஒரு அமைதி , அருள் இந்த மாதிரி கோவில்களில் கிடைக்கும்.


இங்கே நீங்களும் உங்கள் கடவுள் மட்டுமே இருப்பீர்கள்.ஜருகண்டி ஜருகண்டி....போய்கிட்டே இருங்க..போய்கிட்டே இருங்க...முன்னாடி போங்க முன்னாடி போங்கன்னு உங்கள யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.உங்கள் பிள்ளைகளை அழைத்துப்போய் ”இதே பாருப்பா நம்மை படைத்தவனைன்னு அருகில் சென்று கைகாட்ட முடியும். தொடர்ந்து உங்கள் பிள்ளைகளிடமிருந்து வரும் கேள்விகளுக்க பொறுமையாக விடை பகர முடியும்.உணவு கொண்டு சென்று அங்கிருக்கும் ஏழைகள் சிலருக்கு கொடுத்துவிட்டு நீங்களும் குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்து திரும்ப முடியும்.

வம்ச பரம்பரை பெருமை தாங்கிக்கொண்டு கோவில் பொறுப்பை ஏற்றிருக்கும் அர்ச்சகரின் அலட்சியத்தையும் கோவில் நிலை கண்டு கலங்காத மனத்தையும். எல்லாரும் போகும் கோவில்களை நோக்கியே முண்டியடித்து ஓடும் மக்களையும் நினைத்து வெறுப்பும் சிரிப்பும் ஒன்று சேர்ந்து வருகிறது.