Friday 2 September 2011

அவதான் எஞ்சாமி......


எங்கள் ஊரில் ஒரு குடும்பம் இருக்கிறது.பேச்சு வழக்கில் மாமா,அத்தை என்று அழைப்பேன்.கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு.சொந்தம் இல்லை என்றாலும் ஒரே சாதிக்காரர்களுக்குள் முறை வைத்து அழைத்துக்கொள்வது.இது பேச்சு வழக்குக்கு என்று இருந்தாலும் இளைஞர்கள் இளைஞிகள் விஷயத்தில் கூட அந்த சகோதர மரியாதையை கடைபிடிப்பார்கள்.சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.

மேற்சொன்ன தம்பதி வீட்டுக்கு போவதுண்டு.அத்தையும் மாமாவும் என்னிடம் மிகுந்த பாசத்தோடு பழகுவார்கள்.இப்படி அடிக்கடி கூச்சமில்லாமல் சென்று வர அவர்கள் வீட்டில் பெண் பிள்ளை இல்லாமல் இருந்தது ஒரு வசதியாய் போயிற்று .

 நான் போகும்போதெல்லாம் அவர்களுக்கு இடையிலான சண்டையை சமாதானம் செய்வதே என் வேலையாக இருக்கும்.

அப்படி நடக்கும் சண்டையில் அத்தை சாதாரணமாக பயன்படுத்தி மாமாவை ஏச்சும் வாசகம் "செத்து தொலையேன்","நீ என்னிக்கு ஒழிகிறாயோ அன்றுதான் எனக்கு சந்தோஷம்".

பதிலுக்கு மாமா "நான் செத்துட்டா உன்ன நாய் கூட சீண்டாதுடி , உன்ன கட்டிக்கிட்டு நான்தான் கஷ்டப்படுறேன் "


 சில சமயம் நினைத்ததுண்டு ,வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டாலும் இருவருமே தவறான துணையை தேர்ந்தெடுத்துவிட்டிருக்கிரார்களோ .

அத்தை சில சமயம் என்னை பார்த்து சொல்வார் ,"எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா உனக்கே கல்யாணம் கட்டி கொடுத்திருப்பேன் மோரு " 
இந்த சண்டைகளை பார்க்கும் போது அய்யோ தப்பிச்சோம்டா னு நினைத்துக்கொள்வேன்.

வேலை நிமித்தம் தொலைவு வந்த பிறகு அவர்கள் வீடு செல்வது நின்று விட்டது.
அம்மா கால் செய்து ஊரைப்பற்றிய வார நிகழ்வுகளை சொல்லும் போது ஒருநாள் சொன்னார், "மோகன் மாமாவுக்கு ஆக்சிடென்ட் ஆச்சுடா. கார்காரன் அடிச்சு போட்டுட்டு போய்ட்டான் கோமாவுல இருக்காரு".

மிகவும் வருத்தமாய் இருந்தது.

அடுத்து வந்த விடுமுறைக்கு ஊர் போய் முதல் வேலையாக கோவில் சென்று ,பிரசாதத்துடன் அவர்கள் வீட்டுக்கு சென்றேன்.மாமா மட்டுமே இருந்தார் சில உபகரணங்கள் துணையோடு கடுமையான முயற்சியுடன் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார் .ஒரு இன்பம் கலந்த அதிர்ச்சிதான் கோமாவில் இருந்த மனிதன் நடக்குறாரே.

மெல்ல அமர்ந்து பேச்சு கொடுத்தப்போ,முக தசைகளில் சில வித்தியாசமான அசைவுகளுடன் பேசலானார் ..

"கார் என் மேல மோதி தூக்கி எரிஞ்சதுதான் ஞாபகம் இருக்கு மோரு.டாக்டர் பொழைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.உன் அத்த தான் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா தூக்கிக்கிட்டு அலைஞ்சிருக்கா"

" .மூணு மாசமா படுத்த படுக்கைதான் .என மலம் ,மூத்திரம் அள்ளிபோட்டு பல ராத்திரி தூங்காம முழிச்சிக்கிட்டு இருந்து ஒரு தனியாளா ஒரு பெரிய தவமே இருந்து காப்பத்தியிருக்கா.அவ மட்டும் இல்லன்னா நான் இன்னிக்கு கண்டிப்பா இல்லை அவதான் என் சாமி" ...சொல்லி முடிக்கிறப்போ வார்த்தை தழுதழுத்தது ...... 

பேசிக்கொண்டிருக்கும் போதே அத்தை வந்து விட்டார்,வாங்கி வந்த பொருட்களை வைத்துவிட்டு.மாமாவுக்கு சிறுநீர் போக உதவி செய்யும் உபகரணத்தை தேடிக்கொண்டே . "வா மோரு உங்க மாமாவ பார்த்தியா இப்படி ஆயிட்டாரு .என்ன சொல்லுறாரு"
அவர் அத்தை மேல் கொண்டிருக்கும் பாசத்தையும்,நன்றி உணர்வையும் அத்தை புரிந்து கொள்ளட்டுமே. ஒரு வேலை அவர் அத்தையிடம் நேரடியாக கூட இதை சொல்ல முடியாம சங்கோஜப்பட்டிருக்கலாம்..

மென் சிரிப்போடு சொன்னேன் "மாமா என்ன சொல்றாருத்த , நீதான் தெய்வமாம்.நீ இல்லன்னா அவர் இல்லையாம்.ரொம்ப உருகுறார்"

"ஓஹோ....அதெல்லாம் வக்கனையா பேசும் அதுக்கு என்ன கொறச்சல்" 

பேச்சினூடே மாமாவை பார்த்து கேட்டார் "டாக்டர் சொன்ன அந்த பிசியோதரபி பயிற்சியெல்லாம் முடிசிங்களா" 

"இல்லை மோரு வந்துட்டான் .அதான் பேசிக்கிட்டே உக்காந்துட்டேன்" 

மாமா எழுந்து பயிற்சியை தொடர உதவிக்கொண்டே "பாரு மோரு முழுசா குணமாக டாக்டர் பயிற்சிய தினமும் பண்ண சொல்லிருக்காரு. இது செய்யாம இப்படி தெளுவு போட்டு அடிக்குது ,இது என்னைக்கு செத்து ஒழியுமோ தெரியல,நான் தான் இத கட்டிக்கிட்டு அழறேன் "


மாமாவை பார்த்தேன் இந்த முறை பதில் வார்த்தையில்லை. மெல்ல ஒரு சிரிப்பாக இருந்தது.

பேசி முடித்து வீடு திரும்பும்போது நினைத்தேன் அத்தைக்கு ஒரு பொண்ணு இருந்தா நல்லாத்தான் இருந்திருக்குமோ...... 

.