Tuesday 21 August 2012

தாராசுரம்

சில வாரங்களுக்கு முன் ஒரு வார விடுமுறை மாலைப்பொழுது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தேன்.கும்பகோணத்தில் இருந்து மினி பேருந்துகள் அடிக்கடி செல்லும்.10 நிமிட பயணம்தான் 3 கிமீ இருக்கலாம்.மிக இனிமையான பொழுதாக மாற்றியது அந்த இரண்டாம் ராஜராஜசோழன் கட்டிய பொக்கிஷம். பொக்கிஷம்தான் அது. யுனெஸ்கோ அமைப்பு பாதுகாப்பட்ட வேண்டிய பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது இந்த கோவிலை.

நாம கோவிலுக்கு போகமலே ஒரு ஆறு மாசம் இருப்போம். அப்புறம் கொஞ்ச நாள் வெவ்வேறு சிவன் கோவிலா தேடிதேடி ஓடுவோம் பித்து தலைக்கேறி அது தனியும்வரை. இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கு. அப்படி கடந்த சில மாசமா போய்கிட்டே இருக்கேன்.

பொதுவா கோவிலுக்கு உள்ளே போனால் ஆரம்பத்துலயே நாளு பிச்சைக்காரர்கள்,சற்று கடந்து சென்றால் கடைகள் வாங்கம்மா,வாங்கையான்னு அர்ச்சனை,தேங்காய்,பழம் அழைப்புகள்.அதை தாண்டிப்போனா இங்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் அன்னதானம் வழங்கப்படுகிறதுன்னு பெரிய்ய போர்டு.அதை தாண்டி உள்ளே போனா காசு இருக்கறவனுக்கு ஒரு வழி காசில்லாதவனுக்கு ஒரு வழின்னு ஏற்பாடு.

இதெல்லாம் தாண்டி உள்ளே போனா சாமிகிட்ட போய்ச்சேர்வதற்குள்ளேயே “நிக்காதிங்க நிக்காதிங்க போயிகிட்டே இருங்கன்னு ஒரு குரல் வரும்” நம்ம வாயிக்குள்ள போடாங்க்கோகோகோன்னு வரும். இருந்தாலும் சாமீ கோச்சுக்குமேன்னு கடந்து போகவேண்டியிருக்கும். சரின்னு நிக்கிற ரெண்டு நிமிஷத்துக்குள்ள ஐயர் தேவ பாஷையில்  ஏதோ கடமைக்கு சொல்லித்திரும்பி நம்ம கைல திருநீற்றை தெளித்துவிட்டு போக.இடையிலே ஏதோ தீபாராதனைக்கு மட்டும் சாமி வந்து வந்து மறைந்து போவது போல எல்லாரும் முண்டியடித்து நம்மை மறைத்துவிட்டு சாமியை பாத்துவிட்டு போகச்சொல்லிவிடுவார்கள்.

அந்த ரெண்டு நிமிஷத்துள்ள பக்கத்துல நிக்கிற INTEL INSIDE டுன்னு டி ஷர்ட் பெண்ணை பார்த்து சரி உள்ள PROCESSOR இருந்தா என்ன வெர்ஷனா இருக்கும்னு நினைப்பேனா இல்லை சாமியை பார்ப்பேனா.இதுல சாமியும் கூட்டுக்களவானிதான்.அதிலும் கபாலிதான் ரொம்பச்சரியான ஆளு அவன பார்க்கப்போறப்போதான் இந்த மாதிரி டிஷர்ட் யுவதிகள் நிறையபேர் வருகிறார்கள்.

சரி இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன்னா மேற்சொன்ன கொடுமைகள் ஏதும் இல்லாத கோவில் தாராசுரம்.பசும்புல்வெளிகளுக்கு நடுவில் மிக அழகா அமைந்திருக்கிறது.உள்ளே சென்றால் ஒரு அசாதாரணமான அமைதி. அதை என்னென்று சொல்ல..ஹ்ம்ம்ம். நிச்சயமாய் ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கும். எந்த இடையூறுகளும் இல்லாத ஒரு தனிமை ஆனால் அது தனிமை கிடையாது. கடவுள்தான் கூட இருப்பாரே.

பல கோவில்களில் அர்ச்சகர்கள் அரசு மருத்துவமணை செவிலியர் மாதிரிதான் இருப்பார்கள்.இங்கே வேறுவிதமாய் இருக்கிறது.வாங்க வாங்க என்ற அன்பான அழைப்பு. சுக்லாம் பரதரமோ,வக்ரதுண்ட மஹா காயவோ இல்லாத விநாயகர் அர்ச்சனை தூய தமிழில்.

 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!

தென்னாடுடையவனுக்கும் அதேபோல “தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி பொற்றி” பாடிப்போற்றினார். இதுதான் மிகவும் ஜிலிர்ப்பாக இருந்தது.

இந்த கோவில் மயிலாடுதுறை மாயுரநாதர் திருக்கோவில்,சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில்,சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பிறகு கட்டியிருக்கனும் என்று நினைக்கிறேன்.கோவில் விமானத்தை உற்று நோக்கினால் இந்த கோவில்களின் வரலாறு சொல்லும் சிவனின் ரூபங்கள் சிலையாய் இடம்பெற்றிருக்கின்றன்.

கோவில் பலி பீடத்தை தட்டினால் வித்தியாசமான ஒலி எழுப்புகிறது என தகவல் இருக்கு.அங்கே சென்றிருந்தபோது அந்த பலி பீடத்தில் ஏறும் படி முழுவதும் சுற்றி இரும்பு கம்பிகளால் வேயப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தது.அப்போது ஏன் என்று புரியவில்லை.இனையத்தில்தான் இந்த தகவலை கண்டேன்.

குழல் ஊதுறவன் சிலையும்,சங்கு சக்கரம் தாங்கியவன் சிலையும் கூட இடம்பெற்றிருக்கு.வைணவர்களை சைவர் கழுமரம் ஏற்றிக்கொன்றார்கள் என்றால் இது எப்படி சாத்தியம்.எங்கோ இடிக்கிறதே..கோவிலுக்கு பின்புறம் மேற்கு பக்கத்தில் வீரபத்திரர் கோவில் இருக்கிறது கிட்டதட்ட இடியும் தருவாயில்.

கோவிலுக்குள் ஒரு சிறு குப்பை கூட இல்லை.ஆனா கோவிலை விட்டு வெளியே வந்தா குப்பைகளும் மூத்திர நாத்தமும்.திருந்தவே மாட்டீங்களாடா? 




Monday 20 August 2012

பார்த்தன் பள்ளி

சிட்டி சொகுசு வாழ்க்கை கத்து தந்ததை விட கிராமம் எனக்கு நிறைய கத்து தந்திருக்கிறது. ஒவ்வொரு முறை கிராமத்துக்கு போகும்போதும் அது சில கேள்விகளை என மனத்தாளில் எழுதிவிட்டு அடுத்த முறை வரும்போது பதிலோடு வா என்று சொல்லிவிடும்.


இந்த முறை கிராமத்துக்கு வந்ததால் எழுந்த கேள்விகள் இரண்டு......


1.கோவில் கருவறைக்கு வெளியில் நிற்பவனை விட உள்ளே நிற்பவன் தான் நிசமாலுமே கடவுள் மறுப்பாளனோ?


2.திருப்பதி போன்ற பெரிய ஸ்தலங்களுக்கே அடித்து பிடித்து ஓடும் மக்கள் நிசமாலுமே ஆன்மீக புரிதல்களோடுதான் செல்கிறார்களா இல்லை வெறும் ஆட்டு மந்தைகள்தானா?


ஏன் இப்படி எலக்கியவாதி மாதிரி பேசுற? சொல்லவந்தத சொல்லுடேன்னு நீங்க முனகுறது கேக்குது...சொல்றேன்.


நகரத்து கோவில்களை விட மிக பழமையான கோவில்கள். மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில்கள் தஞ்சை நாகை மாவட்டத்தில் நிறைய இருக்கின்றன. ஒரு வாரத்துக்கு ஒரு கோவில் என்றால் கூட புது புது கோவில்களாக சுற்றிக்கொண்டே இருக்கலாம் வருடம் முழுக்க.


இப்ப ஒரு கொசுவத்திய சுத்துவோம்.......


20 வருஷத்துக்கு முன்ன நான் ஒரு உறவினர் வீட்டுக்கு போயிந்தபோது அந்த கோவிலை ஒட்டிய குளத்தில் பால்ய கூட்டாளிகளோடு தம்பட்டம் அடிப்போம் தினமும். ஒரு வைணவ கோவில் அது. பார்த்தன் பள்ளி பெயர்.திருவெண்காட்டில் இருந்து 2 கிலோ மீட்டரில் இளையமது கூடம் செல்லும் வழியில் வரும்.அருகில் உள்ள ரயில் நிலையம் சீர்காழி.சீர்காழியில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் வரும்.நாகப்பட்டினம் நெடுஞ்சாலை வழியாக வருவோர்கள் அல்லிவிளாகம் எனும் ஊரில் இருந்து குறுக்கே 4 கிலோ மீட்டர் தொலைவிலும் வரலாம்.


சுத்துகட்டு சுவர் இல்லாத கோவில் குளம் .3 அடுக்கு பெரிய கோபுரம்.பெரியதும் இல்லாமல் சிறியதும் இல்லாத ரக கோவில் அது. 108 திவ்ய தேசங்களுல் 40 வதாக வரும் . திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலம் அது.அவற்றுள் எட்டாம் திருமொழியில் இருந்து சில பாசுரங்கள்.



கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், காமருசீர்க்

குவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும்,

தவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும்,

பவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.


கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிற டர்த்த காளையென்றும்,

வஞ்ச மேவி வந்தபேயின் உயிரை யுண்ட மாயனென்றும்,

செஞ்சொ லாளர் நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,

பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.


அண்டர் கோனென் னானையென்றும் ஆயர் மாதர் கொங்கைபுல்கு

செண்ட னென்றும், நான்மறைகள் தேடி யோடும் செல்வனென்றும்,

வண்டு லவுபொழில் கொள்நாங்கை மன்னு மாய னென்றென்றோதி,

பண்டு போலன் றென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.


இந்த முறை விடுமுறையில் அந்த கோவிலுக்கு போகனும்னு ஒரு ஆசை வந்தது.ஒரு மாலைப்பொழுதில் நண்பனோடு TVS 50 யை எடுத்துக்கொண்டு 6 கிலோ மீட்டர் அடர்ந்த சவுக்குகாடும்,தென்னை மரங்களும்,சோளக்கொல்லையும் நிறைந்த பாதையில்  பயணித்தோம்.மாலை மங்கி இரவும் சூழும் நேரம் வையில் நிறைய மயில்கள் மேய்ந்துக்கொண்டிருந்தன .ஊரில் ஏற்படும் மாற்றங்களை பற்றி பேசியபடியே கோவிலை அடைந்தோம்.


கண்டதும் கலங்கி போனேன் அது இருந்த நிலை கண்டு.சுற்றுச்சுவர் சாயும் நிலையில்.கோயிலுக்குள் நுழைந்ததும் அபொகலிப்டோ படத்தில் தலை எடுத்த முண்டங்கள் கொட்டி வைத்திருக்கும் மேடு போல ஊனமான சிலைகள் கொட்டி கிடக்கின்றன.கோவில் பிரகாரத்துக்குள் குப்பைகளும் நாய்க்கடுகு போன்ற செடிகளும் நிறைந்து கிடக்கின்றன.

வெறுங்காலால் நடக்க முடியாத படி இருந்தது. மூலவர் சன்னதி பூட்டி கிடந்தது .சரி ஒரு சுத்து சுத்தி வருவோம்னு  பார்த்தா ஆச்சர்யம் கோவில் சுவரை சேர்த்து வைத்து புத்தம் புதிதாக ஒரு ரூம் கட்டி வெள்ளையடித்திருக்கிறார்கள் பிரகாரத்தில் நடக்கும் விசாலமான இடத்தை அடைத்து. எதுக்கு என்று விசாரித்தால் வெளியூர்ல இருந்து யாரேனும் வந்தால் தங்குவதற்காம்.

அடங்கொன்னியா?...... சாமிக்கே சைக்கிளாம் பூசாரிக்கு புல்லட்டாம்.

அடுத்து தாயார் சன்னதி பக்கம் வந்தா ஒரு தீபமும் இல்லை அதும் சுத்தம் செய்யாத குப்பையாக இருந்தது.சரி அர்ச்சகரை கூப்பிடலாம் என்றால் ஆளை காணோம். அவர் வீடு கோவில் வாசலிலே மூன்று மாடிக்கு கட்டப்பட்டு புத்தம் புதிதாக காட்சி தருகிறது.

கோவிலுக்கு வெளியே அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் பேச்சுகொடுத்தோம்.

ஐயிரா சார் அவர் நீங்கள்லாம் கூப்பிட்டா வரமாட்டார். சாயந்தரமா விளக்கு போடுவோம் அப்ப வாங்கன்னு சொல்லுவார்.நீங்க என்ன கார்லயா வந்திருக்கிங்க உடனே வந்து திறக்கறதுக்கு. அது சரி கார்ல வரவன் 100 ரூவா கொடுப்பான் நீங்க 5 ரூவா கொடுப்பீங்க? வேற கோவில் போறதா இருந்தா போயிட்டு திரும்பி வாங்க சார்”.

அது சரின்னு அவருக்கு நன்றி கூறி நடைய கட்டினோம்.அங்க இருந்து சுமார்கிலோ மீட்டர் தொலைவுல இருக்கற ஆழ்வார் திருநகரி கொவிலுக்கு போய்ட்டு திரும்பி வந்த போது கோவில் மூலவர் சன்னதி திறந்து கிடந்தது அப்பவும் அர்ச்சகர் இல்லை.ஆனால் போர்டு இருந்தது.வம்ச பரம்பரை அர்ச்சகர்கள்னு 1700 களில் இருந்து இன்றவரை போட்டிருக்கு.சிரிப்புத்தான் வந்தது.


மேற்சொன்ன இரண்டு கேள்விகளுக்கும் வருவோம்....


இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமிஅம்மன் கோவில் போயிருந்தேன்.

அமிர்தகடேஸ்வரர் கோவில்னு சொன்னாலே யாருக்கும் தெரியாது. ஆனா அபிராமி அம்மன் கோவில் என்றால் எல்லாருக்கும் தெரியும்.எதாலென்றால் அங்குதான் எல்லாரும் சஷடியப்தபூர்த்தி செய்வார்கள்.தன் பக்தனுக்காக எமனின் பாசக்கயிற்றையே தன் மீது தாங்கிய ஈசனின் பெருமை நிறைந்த தலம். ஒரு சிவ ஸ்தலம் ஒரு அம்மன் கோவில்போல அறியப்படுவது அங்க போய் தாலிகட்டிகிட்டா தகரத்துல அடிச்சுப்போட்ட மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கும்னு எவன் கிளப்பி விட்டானோ.

பாருங்க எல்லாருக்கும் கோவில் வரலாறு தெரியுமா அதெல்லாம் கிடையாது அபிராமி கோவில்ல போய்தான் 60 ஆம் கல்யாணம் செய்யனும்.

ஏன்?”

எல்லாரும் பன்றாங்க அம்புட்டுதேன்

கோவில் பிரகாரம் முழுக்க திருமணம் செய்ய சிறு மேடைகள் போன்ற அமைப்புகள் கும்பக்கலசங்களோடு சிறு யாக குண்டமும். போய் ஜோடியாக அமர்ந்து தாலி கட்டிகிட்டு சாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு திரும்பனும். இது மாதிரி திருமணம் செய்ய காசு கட்டனும். கோவிலுக்கு வெளியே நிறைய விடுதிகள் சுற்றுலா வாகனங்கள். எதுக்கு சொல்லுறேன்னா காசு நிறைய புழங்குவது நன்றாகவே தெரியும்.

ஆனால் அதே கோவிலுக்கு பக்கத்தில் அந்த கோவில் சுவரை ஒட்டியே இருக்கு இரண்டாயிரம் ஆண்டு பழமையான சிவன் கோவில் ஒன்று .கோபுரத்தில் அரசமரம் வளர்ந்து இடியும் தருவாயில் இருக்கின்றது அது.வெளவால்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றது.


அட எஞ்சாமி என் நிலை கொண்டு உன்னிடம் வேண்டுவதா இல்லை உன் நிலை கண்டு உனக்காக வேண்டுவதான்னு நினைத்துகொண்டே வெளியே வந்தேன்.


கிட்டதட்ட அதே நிலைதான் நேற்றும் பார்த்தன் பள்ளி பார்த்தசாரதியை கண்டதும்.


திருப்பதில இருக்கற பாலாஜிதானய்யா பார்த்தன் பள்ளிலயும் இருக்கான். திருப்பதிக்கு போய் கோடி கோடியா கொட்டுற நீங்க பார்த்தன் பள்ளி பார்த்தசாரதி போன்றவர்களை ஒரு எட்டு போய் பார்த்து ஏதும் செய்ய முடிஞ்சத செஞ்சீங்கன்னா அவனும் சந்தோஷமா இருப்பான் கண்டிப்பா உங்களுக்கும் சகலமும் கொடுப்பான்.சர்வ நிச்சயமாக திருப்பதிலயும்,பெங்களூர் இஸ்கான்லயும்,மைலாப்பூர் கபாலி கோவிலிளும் கிடைக்காத ஒரு அமைதி , அருள் இந்த மாதிரி கோவில்களில் கிடைக்கும்.


இங்கே நீங்களும் உங்கள் கடவுள் மட்டுமே இருப்பீர்கள்.ஜருகண்டி ஜருகண்டி....போய்கிட்டே இருங்க..போய்கிட்டே இருங்க...முன்னாடி போங்க முன்னாடி போங்கன்னு உங்கள யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.உங்கள் பிள்ளைகளை அழைத்துப்போய் ”இதே பாருப்பா நம்மை படைத்தவனைன்னு அருகில் சென்று கைகாட்ட முடியும். தொடர்ந்து உங்கள் பிள்ளைகளிடமிருந்து வரும் கேள்விகளுக்க பொறுமையாக விடை பகர முடியும்.உணவு கொண்டு சென்று அங்கிருக்கும் ஏழைகள் சிலருக்கு கொடுத்துவிட்டு நீங்களும் குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்து திரும்ப முடியும்.

வம்ச பரம்பரை பெருமை தாங்கிக்கொண்டு கோவில் பொறுப்பை ஏற்றிருக்கும் அர்ச்சகரின் அலட்சியத்தையும் கோவில் நிலை கண்டு கலங்காத மனத்தையும். எல்லாரும் போகும் கோவில்களை நோக்கியே முண்டியடித்து ஓடும் மக்களையும் நினைத்து வெறுப்பும் சிரிப்பும் ஒன்று சேர்ந்து வருகிறது.