Sunday 16 October 2011

புளியமரத்து ஆச்சி


புளியமரத்து ஆச்சி
கதிரவனுக்கு மூன்று வயது இருக்கும் போது தத்துக்கொடுத்தார்கள் புளியமரத்து ஆச்சிக்கு மகனாக .கதிரவன் தாய்க்கு பெரியம்மா மகள்தான் சகுந்தலா எனும் புளிய மரத்து ஆச்சி. ஊரிலே அதிகமாக புளியமரங்களும் பிற பலதரப்பட்ட மரங்களும் அவர் வீட்டு கொல்லைபுறத்தில் நிறைந்திருந்ததால் ஊரினர் அப்படி அழைப்பார்கள் சற்றே மரியாதையோடு.தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கமும் தன் தங்கை மகனில் இளையவனாக கதிரவன் மீது இயல்பாக ஏற்பட்ட பாசமும் தத்து எடுத்துக்கொள்ள காரணமாக இருந்தாலும்.இறந்தால் கொள்ளி வைக்க ஒரு ஆண் வாரிசு இருக்கணும் என்ற சமுதாய வழக்கத்தின் உந்துதலும் காரணமாக இருந்தது .கதிரவனின் அம்மாவுக்கு காரணம் வேறாய் இருந்தது குடிகார கணவனுக்கு பெற்றெடுத்த பிள்ளைகளை வளர்க்கவே கஷ்டப்பட்ட நிலையில் ஒரு பிள்ளை பக்கத்து தெருவில் தன் அக்கா வீட்டில் வளர்வதில் குறையொன்றும் இருந்துவிடப்போவதில்லை என நினைத்தாள்.தவிர கதிரவனை வைத்து மத்த பிள்ளைகளுக்கு கிடைக்கும் சலுகைகளும் சுகமாய் இருந்தது .ஆச்சியின் கணவர் அந்தமான் சென்றவர் திரும்பி வரவேயில்லை சம்பாதிக்கும் போது அவர் அனுப்பி வைத்த பணத்தில் ஆச்சி தனி ஒரு ஆளாய் நின்று வாங்கி சேர்த்த சொத்துக்கள்தான் இவை அனைத்தும்.
தத்துக்கொடுத்த புதிதில் கதிரவன் பல இரவுகள் தூங்காமல் பிறந்த வீட்டுக்கு போகனும்னு அடம்பிடிப்பான் இது ஆச்சிக்கு சங்கடமாய் இருக்கும்.ஆச்சி கொல்லையில் வளர்ந்த விளைபொருட்களுடன் சந்தைக்கு போகும் போது கதிரவனை உடன் கூட்டிசெல்வார் அப்பொழுதெல்லாம் யாரேனும் என்ன ஆச்சி இது உன் மகனா என கேட்டால் ஆச்சிக்கு சந்தோஷம் தாங்காது.அன்றைக்கு கதிரவனுக்கு ஒரு பஞ்சு மிட்டாய்க்கு இரண்டு மிட்டாய் கிடைக்கும்.ஆச்சி இவ்வளவு பாசத்தை கொட்டிக்காட்டினாலும் கதிரவன் அதை புரிந்துக்கொள்ளும் பிராயத்தில் இல்லாமல் இருந்தான்.அதனாலேயே அங்கன்வாடியில் இருந்து நேரடியாக பெற்றவள் இருக்கும் வீட்டுக்கு வந்து தன்னுடன் உடன் பிறந்த மற்ற பிள்ளைகளுடன் விளையாடிவிட்டு உணவருந்தாமலே கூட உறங்கிவிடுவான்.உண்ணாமல் உறங்குவது வெறும் உற்சாகத்தினால் மட்டும் அல்ல அது இல்லாமையினாலும் கூட.அந்த மாதிரி சமயங்களில் ஆச்சி இரவில் பெற்றவள் வீடு வந்து தூங்கும் கதிரவனை முத்ததோடே அள்ளி அணைத்துக தூக்கிக்கொண்டு போவார்.இரவில் தாம் தூங்கியது ஒரு வீட்டிலும் காலையில் விழிப்பது இன்னோர் வீட்டிலும் என உணரக்கூட தலைப்பட்டவனாய் இல்லை.
கதிரவன் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு இந்த மாதிரி நாட்களில் அவனை தூக்கி போவதற்கு பதில் ஆச்சி தன் வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வந்து கதிரவனுக்கு ஊட்டிவிட்டுவிட்டு தூங்கட்டுமே என விட்டுச்செல்வார்.அந்த மாதிரி சமயங்களில் மட்டுமே கதிரவனின் சகோதர பிள்ளைகளுக்கும் கோழிக்கறி குழம்பு என்றால் என்னவென்றே தெரியும்.
கதிரவன் ஐந்து வயதை நெருங்கும் பொழுது தன் வம்சத்திலே முதல் ஆளாக பள்ளியில் சேர்க்கப்பட்டான்.காலம் சென்றது கதிரவன் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவனாகவே இருந்தான்.நல்ல மதிப்பெண் வாங்கும் போதெல்லாம் ஆச்சி ரொம்பவும் பெருமை அடைந்தாள்.கொல்லையில் இருந்த மரங்கள் ஒவ்வொன்றாய் குறைந்தன கதிரவன் ஒவ்வொரு வகுப்பு முன்னேறும் பொழுதும்.கடைசியாக அவன் நகரத்து கல்லூரியில் மேலாண்மை படிக்க சேர்ந்த பொழுது தன் வீட்டையும் வீட்டை ஒட்டியிருந்த ஒரு மரத்தையும் தவிர அனைத்தையும் விற்று அனுப்பிவைத்தார்.
அன்பு மகனை பிரிந்து வருந்தினாலும் அவன் வாழ்க்கையில் கவுரவமான நிலைக்கு வருவதையே விரும்பினாள்.கதிரவன் படிப்பு முடித்து தனக்கு வேலை கிடைத்ததாய் சொன்ன்போது சொல்லவொன்னா சந்தோஷம் கண்டாள் ஆச்சி.ஆனால் கதிரவன் தனக்கு கிடைத்திருப்பது வெளிநாட்டு வேலை என்றும் தான் விரைவில் கிளம்பவேண்டும் என சொன்னபோது கொண்ட சந்தோஷம் அனைத்தும் போனது.விமான நிலையம் வரை வந்து கண்ணீரோடு வழி அனுப்பினாள்.கதிரவன் வேலைக்கு செல்ல ஆரம்பித்த காலத்திலே அவனின் சகோதரிகள் பருவ வயதை அடைந்தார்கள் அவர்களை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.அவன் வாரத்தில் ஒரு நாள் சகோதரிகளிடம் திருமண விஷயமாய் தொலைபேசியில் பேசும் வேளையில் இறுதியில் ஆச்சியிடம் ஓரிரு வார்த்தை பேசும் பொழுது ஆச்சி தான் சுகவீனப்பட்டதை சொல்ல வில்லை.ஆனால் அவனுக்கு திருமணம் செய்துவிடவேண்டும் என்று கூறிவந்தாள். .அப்பொழுதெல்லாம் கதிரவனும் மழுப்பிக்கொண்டே வந்தான்.அப்படி போன் பேச போய் திரும்பும் போது “என்ன இருந்தாலும் பெத்த அப்பா அம்மாதான் உசத்தி அதனால்தான் இந்த வீட்டுக்கு போன் வாங்கி கொடுத்து பேசுறான் கதிரு” என்று சிலர் ஆச்சி காது பட பேசும் போது வருத்தமாகத்தான் இருந்தது.
பின்னொரு நாளில் பேசும்பொழுது தனக்கு ஒரு வெள்ளைக்காரியுடன் திருமணம் முடிந்துவிட்டதாகவும் தனக்கு ஒரு ஆண் மகவு பிறந்துவிட்டதாகவும் சொன்னான்.தன்னுடைய ஆசை மகனுக்கு திருமணம் முடிக்க நினைத்த தன் ஆசை நிராசையானதுக்கு வருந்தி அழுதாலும் மற்றவரோடு பேசும்பொழுது என் மருமக வெள்ளக்காரி.என் மகன்கிட்ட கூட இங்லிஷுலதான் பேசுவாளாம் என் பேரனை வர வழிக்கு கூட்டிக்கிட்டு வரேன்னு சொல்லிருக்கான் எங்க கதிரு .குல தெய்வம் கோயிலுக்கு போய் மொட்ட போட்டு காது குத்த பொறோம் என் பேரனுக்கு என்பது போலவே சொல்லிக்கொண்டிருந்தாள்.
வீட்டை விற்றே வைத்தியம் பார்க்கனும் என்ற நிலை வந்த பொதும் என்றாவது தன் மகன் குடும்பத்தோடு வந்து தங்கபோவதாயிற்றே என நினைத்து அதைச்செய்யவில்லை.திடீரென்று ஆச்சி மிகவும் சுகவினப்பட்டு இறந்துபோனார்.கதிரவனுக்கு தகவல் தரப்பட்டது.அலுவல் காரணமாக வரமுடியாது என கூறினான்.கடைசியில் கதிரவனின் இளைய தம்பி சந்துரு தான் ஆச்சிக்கு எல்லா இறுதி சடங்குகளையும் செய்தான்.
காலம் உருண்டோடியது.கதிரவன் வேலை செய்த அலுவலகம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சீல் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் கதிரவனும் ஒருவராய் ஆனான்.வழக்கில் இருந்து வெளியே வந்தும் மேற்கொண்டு வேறு வேலைக்கு செல்ல இயலாததால் கதிரவனின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியது.கதிரவனின் மனைவி அவனை விவாகரத்து செய்தாள். இனி தன் வாழ்க்கயை தான் பிறந்த கிராமத்திலேயே கழித்துவிடலாம் என நினைத்து தாயகம் வர ஆயத்தமானான்.ம்யூசிக் பேண்டில் இருக்கும் மகனும் ஃபேஷன் டிசைன் படிக்கும் மகளும் கதிரவனோடு வர முடியாது என சொல்லிவிட்டார்கள்.சரி ஆகட்டும் என கிளம்பிவிட்டான் கதிரவன்.
ஒவ்வொரு முறையும் தான் வெளிநாடு கிளம்பும்போதும் விமானநிலையம் வரை வரும் ,தான் பார்த்து மணமுடித்து வைத்த தன் சகோதர சகோதரிகள் கூட இந்த முறை அழைத்து போகவரவில்லை.அதிகாலை டவுனில் இறங்கி ஊருக்கு முதல் பேருந்தை பிடித்து தான் வளர்ந்த வீடு வந்து சேர்வதற்க்குள் அயர்ந்து போனான்.
வலுவிழந்த வீட்டு ஓடுகளையும் களை வளர்ந்த கொல்லையையும் சீரமைக்க என்ன செய்யலாம் என யோசித்து சாய்ந்திருந்தபோது தங்கமனி மாமா வந்து பணம் கொடுத்து சொன்னர்.நீ உன் பிள்ளைகளை அழைத்துவந்தாள் அவர்களை குல தெய்வம் கோவிலுக்கு அழைத்துப்பொய் படையல் போட இந்த பணத்தை கொடுக்க சொல்லி ஆச்சி கொடுத்தது.கைய்யில் பணத்தை வாங்கும் போதும் கண்ணில் நீர் கொட்டுவதை தவிர்க்க முடியவில்லை.
பணத்தை வாங்கி கொண்டுபோய் சுத்தம்செய்யப்பட்ட ஆச்சியின் புகைப்படத்துக்கு முன் வைத்துவிட்டு.கட்டிலில் சாய்ந்தான்.எந்த வீட்டில் சிறுவயதில் சரியாக் தூக்கம் வராமல் ஓடிப்போய்விடுவானோ அதேவீட்டில் கண் சொக்குமளவுக்கு தூக்கம் வந்தது துங்கிவிட்டான் நிம்மதியாத நிரந்தரமாக.
( இது நான் எழுதி பண்புடன் இணைய இதழில் வெளியானது)