Friday 18 November 2011

வருடத்தில் ஒருநாள் - நல்ல நாள்


அட இதெல்லாமா எழுதுறதுன்னுதான் முதல்ல நினச்சேன்.இருந்தும் உங்ககிட்ட பகிர்ந்துக்கனும்னு தோனுது.நோக்கம் இது இன்னும் சிலரை செய்ய தூண்டலாம்.

அலுவலகத்தில் வருடம்தோரும் ஒரு பள்ளிக்கும் சென்று அவர்களுடன் விளையாடி மகிழ்ந்து,கூடி உணவுண்டு ,சிறு போட்டிகள் வைத்து ,பரிசளித்து திரும்புவது வழக்கம்.

அப்படி இந்த முறை சென்றது சாதனா எனும் பள்ளி கேளம்பாக்கத்தில் இருக்கிறது. பால்ய வயதில் இருந்து பத்தாவது படிக்கும் பிள்ளைகள் வரை உள்ள சுமார் முப்பது மாணவர்களுக்கு அதுதான் உணவு,உறைவிடம் மற்றும் கல்வித்தரும் கோவில். அனைவரும் மாற்றுத்திறனாளிகள்.

சென்றது கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் என்றாலும் முன்னதாகவே திட்டமிட்டுக்கொண்டோம் பள்ளி நிர்வாகத்தினரிடமும் தெரிவித்துவிட்டோம். ஞாயிறு காலை என் அலுவலக தோழர் தோழி ஏழு பேருடன் அங்கு சென்ற போது ஒரு குடும்பமே எங்களை வரவேற்றது ஆம் அது குடும்பம்தான் ரத்தத்தால் இணைந்திருந்தால்தான் குடும்பமா என்ன.சிறிது நேர பரஸ்பர உரையாடல்கள் செய்கையினாலே. சென்றவருடம் சென்றிருந்த நண்பர்களை சட்டெனெ கண்டுக்கொண்டு அவர்களுடன் அவர்களுக்கே உறிய அழகு பாஷையில் சம்பாஷனை செய்தது என்னவோ செய்தது.

சிறிது நேரத்திற்கு பின் ஓவியப்போட்டி வைத்தோம். என் பங்குக்கு இரு மழலைகளை தேர்ந்தெடுத்து நான் ஓவியம் வரைந்து காட்ட அவர்களும் என்னுடன் வரையலானார்கள்.அவர்களுக்கு கற்றுக்கொள்ளும்திறன் அதிகமாகவெ இருந்தது.அதில் இரு சிறுவர்கள் வரைந்த ஓவியம் மிக அழகாக இருந்தது.

பிறகு டார்ட் போர்டு,ஸ்னோவ் பவுளிங் போல பேப்பர் கப்பை வைத்து அடித்து சாய்ப்பது கடைசியாக பஞ்சினால் தண்ணீர் கொண்டுபோய் பாட்டிலை நிரப்பும் விளையாட்டு. இது அத்தனையுமே ஒரு போட்டியாக இல்லாமல் குழு உணர்ச்சியை வளர்ப்பதற்காகவே நடத்தப்பட்டது. அதிலிருந்த கிண்டல் கேலிகள் மணிநேரத்தை நொடிப்பொழுதில் கடத்தி மதியத்தை தொட்டது.

இஸ்லாமிய நண்பனுக்கு தெரிந்த இடத்தில் இருந்து அனைவருக்கும் பிரியாணி தயார் செய்திருந்தோம்.எல்லாரும் கூடி ஒன்றாக பிரார்த்தனை செய்துவிட்டு உண்டு மகிழ்ந்து தென்னை மரக்காற்றில் அமர்ந்து கதைக்க ஆரம்பித்தோம். முதல் முறையாக எங்கள் பேச்சில் எர்ரர் இல்லை,டெலிவரி இல்லை,பக் இல்லை,ப்ரொகிராம் இல்லை,இன்ஸ்டாலேஷன் இல்லை.நிறைய பேசினோம் ஒவ்வொரு வாண்டுகளும் எங்களில் ஏதேனும் ஒருவருடன் ஒட்டிக்கொண்டு கதைத்தார்கள். என்னைக்கவர்ந்தது ஷீலாவும்,அய்யப்பனும் முறையே ஐந்து ஆறு வயதிருக்கும். எனக்குத்தான் கஷ்டமாக இருந்தது ஷீலாவின் பேச்சை புரிந்துக்கொள்ள ஆனால் நிறைய பேசினாள் எதேதோ கொஞ்சமே புரிந்துக்கொள்ள முடிந்தது ஆசிரியை உதவியோடு .தன்னை போன்றே மாற்றுத்திறனாளியான சுமதியை அறிமுகப்படுத்தினாள் இப்படி,” என் தோழி,எனக்கு தலைவாரி விடுவாள்,ஏதேனும் தப்பு செய்தால் கண்னை தோண்டிவிடுவாள்”. 

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அய்யப்பனின் பெற்றோர் வந்திருந்தனர் .அய்யப்பனின் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு. சகோதரர்கள் இருவரும்( சைகையினால் தான்) கூடிக்குலாவிக்கொண்டிருந்தனர்.நாங்கள் அங்கிருந்து பிரிவதற்க்கு முன் அவர்கள் இருவரும் பிரியவேண்டியிருந்தது.இருவரும் முத்தங்களாய் பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு ஏனோ அந்த நேரத்தில் அஜீத் நடித்த வில்லன் படத்தில் வரும் சிறுவயது சகோதரர்களின் நினைப்பே வந்து போனது.

குருபிரம்மா குருவிஷ்னு குருதேவோ மஹேஷ்வரா.....அங்கே இருந்த ஆசிரியைக்கு நன்றி சொல்லனும்.அவர்களுடன் பழகும் விதம்.அவர்களுடன் பேசும்போது இரக்கம் என்பதை திணித்து அவர்களை சங்கோஜப்படுத்தும் போக்கு சுத்தமாக இல்லை.அவர் பார்வையில் எல்லாரும் சாதாரண மற்ற குழந்தைகள் போலவே.அதனால் தான் போட்டியில் அவர் பங்குபெறும்போது அத்துனை கிண்டல்கள்,சிரிப்புகள் சிறார்களிடமிருந்து எல்லாம் சைகையாலேயே. ஆனால் அவரோடு தனியே அமர்ந்து பேசும்போதுதான் அவர் ஒவ்வொரு குழந்தையின் நிலை எவ்வாறு அறிந்திருக்கிறார் எத்தகைய பொறுப்போடு இருக்கிறார் என்று தெரிந்தது.பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.அய்யப்பனின் பெற்றோரை பார்த்து வந்த கோபம் ஆசிரியை ஒரு கேள்விக்கு சொன்ன பதிலில் அடங்கியது. இந்த சிறார்களுக்கு இங்கே இருக்கவே விருப்பம்.அவர்களுக்கு தன்னைப்போன்ற சகோதர சகோதரிகளுடன் இருக்கவே பிடித்திருக்கிறது. நாம் ஒருவேளை இப்படி சொல்லி அவர்கள் உலகத்தை சுருக்கிவிடுகிறோமோ என ஐயம் இருந்தாலும் அவர்கள் சந்தோஷமாக இருந்தால் அதுவே சரி அல்லவா. 

அவர்களிடன் என்னை கவர்ந்தது இதுதான் பொறுமை,ஒற்றுமை,விட்டுக்கொடுக்கும் மணப்பாங்கு,நன்றி உரைத்தல்(சாதாரண வார்த்தையினால் நன்றி என உரைக்க முடியாவிடினும் தாங்களுக்கு உரியதான விதத்தில் அவ்வளவு சிரத்தை எடுத்து நன்றி என கூறுகிறார்கள்)

பரிசளிக்கும் நேரம் வந்துவிட்டது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் எல்லோருக்கும் பரிசு கொடுத்தோம். காலையில் எங்களை அறிமுகம் செய்துகொள்ள ஒரு நண்பனுக்கு வாய்ப்புக்கொடுத்தோம். அவன் இப்படி ஆரம்பித்தான் .வீ ஆர் கமிங் ஃப்ரொம் எ சாஃப்வேர் கம்பெனி.......மொழி பெயர்த்து சொல்ல ஆசிரியை இருந்தாலும் இப்படியா பேசுவதுன்னு எனக்கு ஒரு எரிச்சல் .நாமே பேசியிருக்கலாமேன்னு தோனுனது.ஆனால் இப்போ நன்றி சொல்ல வாய்ப்பு வந்தது.நல்லது !.இப்பொழுது எல்லாரோடும் எல்லோரும் நெருங்கி இருந்தோம். காலையில் இருந்ததுக்கு இப்பொழுது அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி,சிரிப்பு . பேச அவர்கள் முன் சென்று நின்றதுதான் தாமதம் அவர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தியவிதம் இன்னும் கண்ணில் இருக்கு.எனக்கு சொல்ல தோன்றியதெல்லாம் நல்லா படிக்கனும்,நல்லா படிக்கனும்,நல்லா படிக்கனும் ஆம் அது ஒன்றே அவர்கள் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றும்.எல்லாருக்கும் நன்றி உரைத்தென் கடவுளுக்கும்.