Friday 12 October 2012

வேளச்சேரியில் சதர்லேண்டுக்கு எதிர்ல் ஒரு சிறு ஹோட்டல் இருக்கிறது இரவு முழுவதும் திறந்திருக்கும்.

ஒரு நாள் இரவு அங்கே போனபோது ஒரு வயாதான பெண்மணி வந்து காசு கேட்டார். காசு கொடுப்பதை விட உணவு வாங்கி கொடுன்னு சுப்ரமணி(எங்க அப்பாருதான்)சொல்லிருக்கார். 

அதனால நானும் என்னம்மா வேணும்னு கேட்டேன் . அவர் சொன்னார் , “ ரெண்டு பூரி வாங்கி கொடுப்பா”. 

வாங்கி கொடுத்ததும் எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந
்து சென்றார்.

மீதி சில்லரை வாங்கிவிட்டு எதிரே இருந்த மெடிக்கலுக்குள் நுழைந்துவிட்டு திரும்பினேன்.

மீண்டும் அந்த வயாதான பெண்மணி இன்னொருவரை கேட்டு மற்றொரு முறை பூரி வாங்கி கொண்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்.

எனக்கு கொஞ்சம் குழப்பம்.நானும் பொல்லாத தானம் பண்ணிட்டேன்னு திமிரு வேற. இந்தம்மா நாம் வாங்கி கொடுத்ததை சாப்பிட்டுருக்க கூட முடியாது அவ்வளவு சீக்கிரத்தில். மீண்டும் எதுக்கு வாங்கிட்டுப்போகுது இது மாதிரி எத்தனை பேருக்கு வாங்கிட்டுபோகும்னு ? 15 ரூபா சல்லிக்காச கொடுத்திட்டு ஏதோ 10 லட்ச ரூபா நம்மள ஏமாத்திட்டு அந்தம்மா என்பது போன்ற பிக்காரித்தனமான நினைப்பு எனக்குள்.

ஹோட்டலுக்கு பக்கத்தில் வெளிச்சம் குறைவான இடத்தில் ஒரு முதிர்ந்த வயது ஆண் அழுக்காக ஆடையோடும் செம்பட்டை நிறத்து கேசத்தோடும் அவர் கையில் பிரித்து வைக்கப்பட்ட பூரிப்பொட்டலத்தோடு அமர்ந்துக்கொண்டிருந்தார். அவர் இந்த பெண்மணியின் புருஷனாய் இருக்க கூடும் . காலில் அடிப்பட்டிருந்தது .இந்த வயதான பெண்மணி அவரோடு அமர்ந்து , கொண்டு சென்ற மற்றொரு பொட்டலத்தை பிரித்து சாப்பிடலானார்.

இந்த பெண்மணி முதலில் வாங்கிச்சென்றது அவருக்காக என பிறகுதான் புரிந்தது.

நாற்று நடும் பெண்கள்,பருத்தி எடுக்கும் பெண்கள், சித்தாலாக சிமெண்ட் தூக்கும் பெண்கள் , பள்ளியில் ஆசிரியையாய் இருக்கும் பெண்கள்,ஐடியில் எஞ்சியனராய் இருக்கும் பெண்கள்,சினிமாவில் கதாநாயகியா இருக்கும் பெண்கள்

இப்படி எல்லா பெண்களும் தங்கள் உலகத்துக்குள் அவர்கள் அப்பன் , சகோதரன் , கணவன் என்ற ஆண்களை தூக்கி சுமக்கிறார்கள் .