Friday 9 March 2012

அரவான் - ஆழியில் இருந்து அகப்பையில் எடுத்தது


பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழை தாய்மொழியாக கொண்ட சமூக குழுக்கள், அதன் தொழில்,பழக்கவழக்கம்,பிரச்சினைகள்,சூழ்ச்சி,சதி,ஒழுக்கம்,காதல்,குடும்பம் அனைத்தையும் காட்சிப்படுத்தி இத்தனைக்குள்ளும் கிராமத்துக்கு ஒரு பெயரில் காவல் தெய்வமாய்  வீற்றிருக்கும் முப்பாட்டன்களில் ஒருவனை. எப்படி வாழ்ந்திருப்பான் என கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் முயற்சியே அரவான்.

புழுதியே போர்வையாய் போத்தியிருக்கும் வறண்டு விரிந்த பொட்டல் வெளியில் வேறு தொழில் இல்லாது கேப்பைக்கும்,நெல்லுக்கும் கண்ணக்கோல் வைத்து திருடும் குழுக்களும்.திருடு நடக்காமல் காவல் காக்கும் குழுக்களும் நடையாலும் ஓட்டத்தாலும் எட்டிப்பிடிக்கும் தூரத்தில் வாழ்கின்றன.
களவுக்கு பெயர் போன வேம்பூரைச்சேர்ந்த கொம்பூதி அந்த ஊரில் திறமையான களவானியாக இருக்கிறார்.அவரின் வழி நடக்கும் மற்ற களவானிகளும்.ஆனால் இவர்கள் கண்ணக்கோல் வைக்கும் இடங்களுக்கு இவர்களுக்கு முன் சென்று யாரோ களவாடிவிட்டுப்போய்விட யார் என்று அறிய முயற்சிக்கயில் கையில் சிக்கும் களவானிதான் சின்னானன்.யாரும் இல்லாத அனாதை என சொல்ல தன்னோடு சேர்த்துக்கொண்டு தோழனாக பாவிக்கிறார் கொம்பூதி.
நெருக்கடியான ஒரு நேரத்தில் சின்னானுக்கும் தமது ஊருக்கும் இரத்த பந்தம் உண்டு என்பதை தெரிந்து நெகிழ்ந்து மகிழ எத்தனிக்கும் அடுத்த கணமே அந்த சந்தோஷம் நிலையின்றிப்போகிறது. சின்னானன் பலிக்கொடுக்க நேர்ந்துக்கொடுக்கப்பட்டவன் என்று தெரிய வருகிறது.
இங்கிருந்து சின்னானன் கதை ஆரம்பிக்கிறது.....

களவுசெய்ய குழுக்கள் இருக்க காவல் காக்கவும் குழுக்கள் இருக்கத்தானே செய்யும் அப்படி ஒரு குழுவில் இளந்தாரையாக சுற்றித்திரிபவந்தான் சின்னானன்.காவலும் காதலுமாக நாட்கள் நகர்கையில் திடீரென்று ஒரு நாள் ஒரு இளைஞன் மர்மமான முறையில் சின்னானன் கிராமத்து மந்தையில் கொலையுண்டுக்கிடக்க கதை சூடு பிடிக்கிறது.

 தாங்கள் அந்த கொலையை செய்யவில்லை என்றாலும் சூழ்நிலையின் நெருக்கடியால் அந்த கொலை நடந்தது தங்கள் கிராமத்து மந்தையில் என்பதால் அந்த கொலைக்கு பொறுப்பேற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள் சின்னானம்பட்டிக்காரர்கள். செஞ்ச கொலைக்கு பரிகாரம் இன்னொரு உயிர் என தீர்ப்பு வழங்கப்படுகிறது அந்த பகுதி பாளையத்துக்காரரால். பலி நர பலி. தேர்ந்தெடுக்கப்படும் பலிஆள் சின்னானன்.
முப்பது நாட்களில் தான் மரித்துப்போவேன் என நாட்கள் எண்ணிக்கொண்டிருக்கையில் கொலையை பற்றிய துப்புக்கிடைக்க. கொலையாளியை தேடி ஒடுகிறான் சின்னானன்.கொலைக்கு பலிதான் தீர்வு என தீர்ப்பெழுதியவனே கொலையாளியாய் இருக்க மிச்ச இருக்கும் சில மணி நாழிகைக்குள் அவனை ஊர் முன்னாடி நிறுத்தி உண்மை  உரைத்து ஊர் மானம் காப்பாற்றவும் தன் உயிர் காக்கவும் விழையும் சின்னானன் முயற்சி என்ன ஆனது என்பதே மீதி கதை.
படத்தை ஊன்றிப்பார்க்கவேண்டும். சில சம்பவங்கள் முன்னும் பின்னும் வரும். முன் பார்க்கும்போது வெகு சாதாரணமாய்த்தெரியும் அதே காட்சி பின்னாடி வரும்போது கதையை புரட்டிப்போடுகிறது.

நான் ரசித்தவை :
களவு செய்பவர்கள் ரொம்ப சிரமத்தில் உயிரை பணயம் வைத்து செய்தாலும் அதை விற்கும் போது அவர்களுக்கு கிடைப்பது என்னவோ சொற்பமே.நோகாம நோம்புக்கும்பிட்டு அடுத்தவன் முதுகெலும்பை முறித்து வாழும் கூட்டம் காலங்காலமாய் இருந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. இப்படி திருடியதை விலை பேசும்போது அது படியாமல் போக விற்க மறுத்து வெளியேறும் அல்பமாய் திருடும் ஒருவனின் கையிலே ஒரு உயிரை காப்பாத்தும் துப்பு இருக்கும். சரிதான் கிடைத்தது போகட்டும்னு விற்றிருந்தால்.கதை வேறு,முடிவு வேறு ,வரலாறு வேறு.
அதே போல் திருடப்போகும் திருடனின் தும்மலுக்கான விலை ஒரு உயிர்.
படத்தை வெகு சாதரணமாய்  பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பலி ஆளை நிரணயிக்கும் கூழாங்கல் கூடையில் விழுந்ததும் சோகம் பீடித்துக்கொண்டது அது படம் முடிந்து வீடு திரும்பியும் இருந்தது.

வெற்றிலை பாக்கு,தமிழர் கல்யாணம்,பகிர்ந்துண்டு வாழ்தல்,காதலை சொல்லும் விதம்,மனையாளுக்கு கொடுக்கும் சரி சமமான மரியாதை,முக்கால் வேட்டி கட்டிய மனிதர்கள்( வேட்டிய முழுசா கட்டாம அள்ளிச்சொருகுன மாதிரி ஏத்த இறக்கமா கட்டிகிட்டு இடுப்பு பக்கத்துல பொட்டமாதிரி கட்டிகிட்டு வயல் வெளில வேலை பாக்குற கிராமத்து ஆட்களை இன்னும் பார்க்கிறேன்). இதெல்லாம் சின்ன சின்னதாய் வந்து போனாலும் பிடித்திருக்கிறது.

மரணதண்டனையை முரட்டுத்தனமாக ஆதரிப்பவன் நான்.என்னை ரொம்பவே யோசிக்க வைத்து என் நிலையை சிதைக்குது இந்த படம். எத்தனை சின்னான்கள் இந்த உலகில் வாழ்ந்தார்களோ என என்னும்போது மனசு பதறுகிறது.வசந்தபாலன் சார் யோசிக்க வைச்சிட்டீங்க.

இந்த படம் எனக்குள் ஏற்படுத்திய சிந்தனைகளுள் இன்னொன்று. என் கொடியும் எங்கிருந்து ஆரம்பித்ததோ. இப்படியே சாமியாகிப்போன என் முப்பாட்டன் எவனோ அவன் கோவில்தான் எங்கிருக்கோ. பங்காளிகள் தகராறு, மதம் மாறிய சொந்தங்கள் ,புலம்பெயர்ந்த நகர வாழ்கை இப்படி பல என் குல சாமி என்னது? அதுக்கு என்ன வரலாறு? என தெரியாமல் இப்படி பலவற்றை இழந்து நிற்பது வருத்தத்தை தருகிறது.

புத்தகம் பல எழுதி வரலாறை தெரிந்துக்கொள் தமிழா என தலை கீழ நின்னு தண்ணிக்குடிப்பதற்கு பதில் இது மாதிரி சினிமாவில் சொல்வது இன்னும் மக்களை சேரும் நான் எங்கிருந்து வந்தோம் என தெரிந்துக்கொள்ள.

ஊர்ல தீப்பாஞ்சம்மன் கோவில்னு ஒன்னு இருக்கு. நான் என்னைக்கும் பெருசா போனது இல்ல. அப்பா தீமிச்சிருக்கார் அந்த கோவில் திருவிழாவுல. அரவான்ல சின்னானன் மனைவி சொல்லுவாளே நீ முப்பதாம் நாள் போகும் முன் இருபத்தி ஒன்பதாம் நாள் நான் தீப்பாஞ்சிடுவேன்னு. எங்கூரு தீப்பாஞ்சம்மனும் எதுக்கு தீப்பாஞ்சாளோ தெரியல.இனி சாமியா பாக்குறேனோ இல்லையே மரியாதைக்குறிய மூத்த கிழவியா பார்ப்பேன் அவளை.



-நன்றி-