Friday 15 June 2012

பெண்களை புரிந்துக்கொள்வது எப்போதும் சிரமமே.....

(அப்பா அம்மா இருவரும் சென்னை வந்து என்னோடு தங்கியிருந்தபோது)

காலை அலுவலகம் கிளம்புபோது , அம்மா எனை பார்த்து :
=====================================================

”யப்பாடி ...... உங்கப்பாவுக்கு என்னமோ போல இருக்குதாம். கைலாம் நடுங்குதுங்குது. சாயந்திரம் வரும்போது எதாவது வாங்கிட்டு வாடி. உன் கிட்ட எப்படி கேக்குறதுன்னு யோசிக்குது. அதும் வேற யார்ட்ட கேக்கும்...”

“சரிம்மா”, நான்

மாலை அலுவலகம் முடிந்ததும் ஒரு டாஸ்மாக்கில் நுழைந்தேன். முதலில் என்ன வாங்குவது என்று தெரியவில்லை. பிராண்டியா,விஸ்கியா இல்ல ரம்மா? சரி என்ன பிராண்டு ?

கண்ணுக்கு அழகாக தெரிந்தது LA MARTIN VSOP தான்.சரி என்று ஒரு ஹாஃப் வாங்கிக்கொண்டு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் சென்று இன்னும் சில பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு போய்ச்சேர்ந்தேன்.

டவுசரோடு சுத்திய காலத்தில் சாயந்திரம் அப்பா வீடு வந்து சேரும் போது அவர் கொண்டு வரும் பையை எடுத்து பார்ப்போம் அதில் என்னன்ன திண்பண்டங்கள் இருக்கிறதென்று துழாவி பார்ப்போம். ஏதேனும் இருந்தால் சந்தோஷம் இல்லைன்னா ஒரு ஏமாற்றம் இருக்கும்.

இன்று என் தந்தையில் என்னைக்கண்டேன் அவரும் அதே மாதிரி நான் கொண்டு சென்ற கேரி பையை துழாவிப்பார்த்தபோது.

சிறுபிள்ளை மாதிரி தேடிக்கொண்டிருந்தார். கடைசியில் அவர் கையில் அது கிடைத்தேவிட்டது.

சாப்பிட உட்காரும் போது அப்பாவிடம் கேட்டேன். “ ஏம்ப்பா சரக்கு எப்படி இருந்தது”. நெளிந்த படியே ஆனா சந்தோஷமாக சொன்னார், “ ஹ்ம்ம்ம் நல்லாருக்குப்பா. 

இரவு உணவின் போது , அம்மா அப்பாவை பார்த்து :
===============================================

”எம்பூட்டு புள்ள இருக்கற மரியாதை என்ன? இதுவரைக்கும் தண்ணி கிண்ணி அடிச்சி பாத்துருப்போமா?... நம்மால காலிப்பயங்க கூட போய் நின்னு ஒயின்ஸாப்ல சரக்க வாங்க வச்சிட்டோமேன்னு கொஞ்சமாச்சும் வருத்தம் இருக்கா உனக்கு?...நல்லா சிரிச்சிக்க”.

அப்பாவின் புலம்பல் நன்றாகவே கேட்டது எனக்கு, “ இதுக்கு நீ அவன வாங்கிட்டு வரவே சொல்லிருக்கெ வேணாம் “

---------------------------------------------------------------------------------
நண்பர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் மிகவும் காஸ்லியான சரக்காமே பக்கார்டி,ரெமி மார்ட்டின் etc.... அப்பாவுக்கு ஒரு நாளைக்கு வாங்கித்தரனும். :-))