Thursday 17 January 2013

இதய தெய்வத்தின் இருதய சத்தம்

சரி தலைவன் பிறந்த நாள் இன்றைக்கு ஒரு நிகழ்வ சொல்லுறேன். 

அப்பாவ சென்னை அழைத்து வந்திருந்த போது. குடும்பத்தோடு மெரினாவுக்கு போய் பொன்மன செம்மலின் இதயம் அங்கு உறங்கிக்கொண்டிருக்கிறதல்லவா அதை பார்க்க போயிருந்தோம்.

நான் சிறு வயதா இருக்கும்போதே எம் ஜி ஆர் சமாதியில் காது வைத்து கேட்டால் அவர் கையில் கட்டியிருந்த கடிகாரம் இன்னும் ஓடும் சப்தத்தை கேட்கலாம் என்று ஊரு பெருசுகள் சொல்லி பீலா விடுவதை கேட்டிருக்கிறேன்.

மெரினாவுக்கு போனதும் அப்பா அதிமுக வேட்டியை மடித்து கட்டிகொண்டு சற்றே திமிருடன் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திலுருந்து சமாதி வரை நடந்து வந்தார். ”வடிவேல் ஒரு படத்துல போலீஸ் கிட்ட அடிவாங்குவானே நீ அது மாதிரி அடி வாங்க போற பாரு. வேட்டிய இறக்கி கட்டு”, அம்மா சொன்னார் .” நடக்குறது எங்க ஆட்சி எவன் என் மேல கை வைக்க முடியும் “ இது அப்பா .

இவ்வளவு பீத்திக்கொண்டு வந்தவர் எம் ஜி ஆர் சமாதி உள் நுழைந்ததும் மடித்ததை இறக்கி விட்டுக்கொண்டார்.

இந்த கடிகாரம் மேட்டர் எந்த அளவு பிரபலமா இருக்கு பாருங்க. எங்க முன்னாடி சென்ற ஒரு தெலுங்கர் கூட்டம் கூட சமாதியின் மீது காதை வைத்து கேட்டுக்கொண்டே இருந்தது.

இரண்டு சித்தப்பாக்கள் நான்கு அத்தைகள் என ஒட்டுமொத்த குடும்பமும் அதிமுக ஆதரவானது என் அம்மா மட்டும் தீவிர திமுக அனுதாபிஅவர் குடும்பமும் அப்படியே .கலைஞர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ”கொல்றாங்கோ கொல்றாங்கோ” ன்னு கத்தியபோது நான் டிவியில் பார்த்து சிரித்தேன் என் அம்மா அழுதார்.

அவர் கூட வந்தால் சும்மா இருப்பாரா . அப்பாவும் முன் சென்று சமாதியை வணங்கிகிட்டு சமாதி மீது காதை வைத்து கேட்டார்.

அம்மா சொன்னார் கடுப்புடன் நக்கலாக சிரித்துகொண்டு ,” என்னாடிது ஒன்னுந்தெரியாத மக்கதான் காத வச்சு கேக்குதுன்னா நீயுமா”

அப்பா நிதானமாக சொன்னா “ கடிகாரம் இப்ப சத்தம் போடாதுன்னு எனக்கும் தெரியும் நான் அவர் இருதயம் துடிக்கும் சத்தம் கேக்குதான்னு பார்த்தேன்”

பின்ன ஏன்ய்யா அதிமுக ஜெயிக்காது :-)