Tuesday 21 August 2012

தாராசுரம்

சில வாரங்களுக்கு முன் ஒரு வார விடுமுறை மாலைப்பொழுது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தேன்.கும்பகோணத்தில் இருந்து மினி பேருந்துகள் அடிக்கடி செல்லும்.10 நிமிட பயணம்தான் 3 கிமீ இருக்கலாம்.மிக இனிமையான பொழுதாக மாற்றியது அந்த இரண்டாம் ராஜராஜசோழன் கட்டிய பொக்கிஷம். பொக்கிஷம்தான் அது. யுனெஸ்கோ அமைப்பு பாதுகாப்பட்ட வேண்டிய பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது இந்த கோவிலை.

நாம கோவிலுக்கு போகமலே ஒரு ஆறு மாசம் இருப்போம். அப்புறம் கொஞ்ச நாள் வெவ்வேறு சிவன் கோவிலா தேடிதேடி ஓடுவோம் பித்து தலைக்கேறி அது தனியும்வரை. இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கு. அப்படி கடந்த சில மாசமா போய்கிட்டே இருக்கேன்.

பொதுவா கோவிலுக்கு உள்ளே போனால் ஆரம்பத்துலயே நாளு பிச்சைக்காரர்கள்,சற்று கடந்து சென்றால் கடைகள் வாங்கம்மா,வாங்கையான்னு அர்ச்சனை,தேங்காய்,பழம் அழைப்புகள்.அதை தாண்டிப்போனா இங்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் அன்னதானம் வழங்கப்படுகிறதுன்னு பெரிய்ய போர்டு.அதை தாண்டி உள்ளே போனா காசு இருக்கறவனுக்கு ஒரு வழி காசில்லாதவனுக்கு ஒரு வழின்னு ஏற்பாடு.

இதெல்லாம் தாண்டி உள்ளே போனா சாமிகிட்ட போய்ச்சேர்வதற்குள்ளேயே “நிக்காதிங்க நிக்காதிங்க போயிகிட்டே இருங்கன்னு ஒரு குரல் வரும்” நம்ம வாயிக்குள்ள போடாங்க்கோகோகோன்னு வரும். இருந்தாலும் சாமீ கோச்சுக்குமேன்னு கடந்து போகவேண்டியிருக்கும். சரின்னு நிக்கிற ரெண்டு நிமிஷத்துக்குள்ள ஐயர் தேவ பாஷையில்  ஏதோ கடமைக்கு சொல்லித்திரும்பி நம்ம கைல திருநீற்றை தெளித்துவிட்டு போக.இடையிலே ஏதோ தீபாராதனைக்கு மட்டும் சாமி வந்து வந்து மறைந்து போவது போல எல்லாரும் முண்டியடித்து நம்மை மறைத்துவிட்டு சாமியை பாத்துவிட்டு போகச்சொல்லிவிடுவார்கள்.

அந்த ரெண்டு நிமிஷத்துள்ள பக்கத்துல நிக்கிற INTEL INSIDE டுன்னு டி ஷர்ட் பெண்ணை பார்த்து சரி உள்ள PROCESSOR இருந்தா என்ன வெர்ஷனா இருக்கும்னு நினைப்பேனா இல்லை சாமியை பார்ப்பேனா.இதுல சாமியும் கூட்டுக்களவானிதான்.அதிலும் கபாலிதான் ரொம்பச்சரியான ஆளு அவன பார்க்கப்போறப்போதான் இந்த மாதிரி டிஷர்ட் யுவதிகள் நிறையபேர் வருகிறார்கள்.

சரி இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன்னா மேற்சொன்ன கொடுமைகள் ஏதும் இல்லாத கோவில் தாராசுரம்.பசும்புல்வெளிகளுக்கு நடுவில் மிக அழகா அமைந்திருக்கிறது.உள்ளே சென்றால் ஒரு அசாதாரணமான அமைதி. அதை என்னென்று சொல்ல..ஹ்ம்ம்ம். நிச்சயமாய் ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கும். எந்த இடையூறுகளும் இல்லாத ஒரு தனிமை ஆனால் அது தனிமை கிடையாது. கடவுள்தான் கூட இருப்பாரே.

பல கோவில்களில் அர்ச்சகர்கள் அரசு மருத்துவமணை செவிலியர் மாதிரிதான் இருப்பார்கள்.இங்கே வேறுவிதமாய் இருக்கிறது.வாங்க வாங்க என்ற அன்பான அழைப்பு. சுக்லாம் பரதரமோ,வக்ரதுண்ட மஹா காயவோ இல்லாத விநாயகர் அர்ச்சனை தூய தமிழில்.

 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!

தென்னாடுடையவனுக்கும் அதேபோல “தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி பொற்றி” பாடிப்போற்றினார். இதுதான் மிகவும் ஜிலிர்ப்பாக இருந்தது.

இந்த கோவில் மயிலாடுதுறை மாயுரநாதர் திருக்கோவில்,சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில்,சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பிறகு கட்டியிருக்கனும் என்று நினைக்கிறேன்.கோவில் விமானத்தை உற்று நோக்கினால் இந்த கோவில்களின் வரலாறு சொல்லும் சிவனின் ரூபங்கள் சிலையாய் இடம்பெற்றிருக்கின்றன்.

கோவில் பலி பீடத்தை தட்டினால் வித்தியாசமான ஒலி எழுப்புகிறது என தகவல் இருக்கு.அங்கே சென்றிருந்தபோது அந்த பலி பீடத்தில் ஏறும் படி முழுவதும் சுற்றி இரும்பு கம்பிகளால் வேயப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தது.அப்போது ஏன் என்று புரியவில்லை.இனையத்தில்தான் இந்த தகவலை கண்டேன்.

குழல் ஊதுறவன் சிலையும்,சங்கு சக்கரம் தாங்கியவன் சிலையும் கூட இடம்பெற்றிருக்கு.வைணவர்களை சைவர் கழுமரம் ஏற்றிக்கொன்றார்கள் என்றால் இது எப்படி சாத்தியம்.எங்கோ இடிக்கிறதே..கோவிலுக்கு பின்புறம் மேற்கு பக்கத்தில் வீரபத்திரர் கோவில் இருக்கிறது கிட்டதட்ட இடியும் தருவாயில்.

கோவிலுக்குள் ஒரு சிறு குப்பை கூட இல்லை.ஆனா கோவிலை விட்டு வெளியே வந்தா குப்பைகளும் மூத்திர நாத்தமும்.திருந்தவே மாட்டீங்களாடா? 




No comments: